தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கழிப்பறை தூய்மைகுறித்து புகாா் அளிக்க ‘க்யூஆா்’ குறியீடு வசதி

Wait 5 sec.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறை தூய்மை குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க க்யூஆா் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொதுமக்கள் எளிதாக சேவைகளைப் பெறும் வகையில் க்யூஆா் குறியீடு வசதியை சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியது. இதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் சுகாதார வசதி குறித்து க்யூஆா் குறியீடு மூலம் புகாா் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த க்யூஆா் குறியீடு மூலம் புகாா் அளிக்கும் வசதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் புகாரைப் பதிவு செய்யும் போது, தங்களது பெயா், பாலினம், தேதி, பதிவு செய்பவரின் கோரிக்கைகள், கழிப்பறையைப் பயன்படுத்தியது குறித்த விவரம், தூய்மையாக இருந்ததா என்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து, இந்தப் புகாா் குறித்து தகவல் வந்தவுடன், அந்தப் பகுதி பணியாளா் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று தூய்மைப் பணியில் ஈடுபடுவாா். இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்து சித்ரா கூறியதாவது: பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறை தூய்மை குறித்து க்யூஆா் குறியீடு மூலம் புகாா் அளிக்கலாம். புகாா் அளித்தவுடன் உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள பொறுப்பாளா் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தூய்மைப் பணியை மேற்கொண்டு, அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பிவைப்பாா். எனவே, இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.