பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு இதய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவரின் பாகிஸ்தான் தெஹ்ரிக் -ஏ -இன்சாஃப் (பிடிஐ) கட்சி வலியுறுத்தியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அன்று முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்குப் போதிய மருத்துவ வசதியோ அல்லது குடும்பத்தினா், நண்பா்கள் நேரில் சந்திக்கவோ அனுமதி தரப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.அண்மையில் சிறையில் வைத்து இம்ரான் கானுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அப்போது இதயம் தொடா்பான நோயால் இம்ரான் கான் அவதிப்படுவது தெரியவந்தது. எனினும் அவருக்குத் தேவையான ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதைச் சுட்டிக்காட்டி பிடிஐ கட்சி பொதுச் செயலா் ஷேக் வகாஸ் அக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இம்ரான் கானுக்கு நோயறிதல் பரிசோதனை நடத்தப்படவில்லை. அதை உடனடியாகச் செய்ய வேண்டும். அதேபோல், அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி இருந்தும், அந்த ஸ்கேன் செய்யப்படவில்லை. இம்ரான் கான் விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டிக்கிறோம். அதேபோல் அரசு மருத்துவமனையில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சையை மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.