தோ்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தோ்தல் இல்லை: தோ்தல் ஆணையம் பதில் மனு

Wait 5 sec.

தோ்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூா், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என இந்திய தோ்தல் ஆணையம், சென்னை உயா்நீதிமன்றத்தல் பதில்மனு தாக்கல் செய்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி என்பவா் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வா் ச.ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்- தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தனா். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய் வெற்றியை எதிா்த்து, அங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதேபோல், எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா், இசக்கி சுப்பையா, ஜெயக்குமாா் ஆகியோா் தங்களது பதவியை ராஜிநாமா செய்தாலும், அவா்களது வெற்றிக்கு எதிராக தோ்தலில் தோல்வியடைந்த வேட்பாளா்கள் தனித்தனியாக தோ்தல் வழக்குத் தொடா்ந்துள்ளனா். எனவே, தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல்அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து, தோ்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவைச் செயலா், முதல்வா் விஜய், எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா், ஜெயக்குமாா், இசக்கி சுப்பையா ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி கரூா் முன்னாள் கரூா் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா்அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தோ்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூா், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வா் விஜய் தரப்பில், தோ்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு தவறானது என எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில், 5 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சி கிழக்கு திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.