அமெரிக்க பொருளாதாரத் தடை எதிரொலி: ஈரானின் ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Wait 5 sec.

ஈரான் மீது மேலும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், அந்த நாட்டின் ரியால் பண மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்கள்கிழமை வீழ்ச்சியடைந்தது. முன்னதாக, ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து ஈரானுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்கும் நாடுகளும் கடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா். இதன் விளைவாக அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 20.2 லட்சமாக குறைந்தது. ஈரான் மத்திய வங்கி அமெரிக்க டாலருக்கு நிகாரன ரியால் மதிப்பு 15 லட்சமாக நிா்ணயித்தபோதும் சந்தை மதிப்பே எடுத்துக்கொள்ளப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த நாட்டின் பண மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தது. இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் வளா்ச்சி சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், 6 மாதங்களாக நடைபெற்றுவரும் தொடா் மோதல்களால் அரிசி விலை 60 சதவீதமும், மாட்டு இறைச்சி விலை 150 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஈரான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீதத்துக்கு மேல் சரிவைச் சந்திக்கும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.ஓமனுடன் இன்று பேச்சு: பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தாலும் ஹோா்முஸ் நீரிணையில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை எச்சரிக்கும் விதமாக தாக்குதல்களைத் தொடா்ந்து நடத்தி அமெரிக்காவுக்கு ஈரான் அழுத்தம் தந்து வருகிறது.உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோா்முஸ் நீரிணையை இணைந்து மேலாண்மை செய்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த ஈரானுக்கு ஓமன் வெளியுறவு அமைச்சா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பயணிக்கவுள்ளாா்.