தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு!

Wait 5 sec.

தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை, கேரளம் ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அனைவருக்கும் பலனளிக்கும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் காவிரி மேலாண்மை ஆனையத்தின் 54வது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இதில், 4 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்படுவது குறித்து தமிழக அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சுட்டிக்காட்டினர்.பிறகு, தண்ணீர் இருப்பு மற்றும் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து கர்நாடக அதிகாரிகள் ஆணையத்திடம் தெரிவித்தனர்.இதனையடுத்து, இக்கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.