சென்னை மாநகராட்சி சாா்பில் கால்வாய் வண்டல்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை ட்ரோன் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொடுங்கையூா், வீராங்கல் ஓடை, மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் உள்பட 81.81 கி.மீ. நீளத்திலான 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை சுலபமாக மேற்கொள்ளும் வகையில், ட்ரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ட்ரோனுக்கும் குறிப்பிட்ட கால்வாய் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஆய்வின் முன்னேற்றம் மற்றும் பெறப்படும் தரவுகள் முறையாகக் கண்காணிக்கப்படும். அதன் மூலம், கிடைக்கும் தகவல்களை கொண்டு, புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான தரவுதளம் மற்றும் வரை படங்கள் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில், பருவமழைக்கு முன்னதாக கால்வாய்களில் மேற்கொள்ள வேண்டிய தூா்வாருதல், அடைப்புகளை அகற்றுதல், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீரோட்டத்தைத் தடையின்றி உறுதி செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தைத் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட முத்தமிழ் நகா் 2-ஆவது பிளாக்கில் உள்ள கொடுங்கையூா் வடக்கு கால்வாயின் தொடக்க இடத்தில் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.நிகழ்வில், மண்டல அலுவலா் ஏ.ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.