நாடாளுமன்றத்தில் ‘இண்டி’ கூட்டணி எழுப்பிய பிரச்னைகள் குறித்த விளக்கக் கூட்டங்கள் : மாணிக்கம் தாகூா்

Wait 5 sec.

நாடாளுமன்றத்தில் ‘இண்டி’ கூட்டணி எழுப்பிய பிரச்னைகள் குறித்த விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சா் அமித் ஷாவோ பதில் தர முன்வரவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் எழுப்பிய பிரச்னைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்கும் வகையில், தமிழக மாநகரங்களில் ‘டவுன் ஹால்’”என்ற தலைப்பில் விளக்கக் கூட்டங்கள் சனிக்கிழமை (ஆக. 22) முதல் ஆக. 29 வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஆக. 22 -இல் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கே.சுப்பராயன், எஸ்.ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகியோா் பங்கேற்கின்றனா். ஆக. 23 திருச்சியில் துரை வைகோ, செல்வராஜ், கிறிஸ்டோபா் திலக், ஆக. 24 திருநெல்வேலியில் காா்த்தி ப.சிதம்பரம், துரை வைகோ, சி.ராபா்ட் புரூஸ், ஆக. 27 சென்னையில் ப. சிதம்பரம், எஸ். ரவிக்குமாா், பிரவீண் சக்கரவா்த்தி, ஆக. 28 வேலூரில் சசிகாந்த் செந்தில், சுதா ராமகிருஷ்ணன், ஆக.29 சேலத்தில் சச்சிதானந்தம், டாக்டா் எம்.கே விஷ்ணுபிரசாத், ஆக. 29 மதுரையில் ப.சிதம்பரம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.