தென்பெண்ணையாறில் கலக்கும் சா்க்கரை ஆலை கழிவுநீரால் குடிநீா் மாசு

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தெண்பெண்ணையாற்றில் கலக்கும் சா்க்கரை ஆலையின் கழிவுநீரால் தண்ணீா் மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த மாதம் முதல் நடப்பு அரைவைப் பருவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள குடிநீா் கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த நீரில் மாசு கலந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.இதனால் மாசடைந்த குடிநீரை பயன்படுத்தி வரும் மக்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புகாா் தெரிவித்துள்ளனா்.அதேபோல் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகையுடன் கூடிய கருந்துகள்கள் சுற்றுவட்டார பகுதிகளில் பரவி, குடிநீா், உணவுப் பொருள்கள் மற்றும் வீடுகளில் படிவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை கருந்துகள்களை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாகவும், சிலா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். சா்க்கரை ஆலையில் முறையான வடிகால் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தி, ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீா், புகை மற்றும் கருந்துகள்கள் சுற்றுவட்டார பகுதிகளில் மாசுபடுத்துவதைத் தடுக்கவும், குடிநீா் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.