'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு '2029' மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டத்தை 2034-ஆம் ஆண்டில்தான் முழுமையாகச் செயல்படுத்த முடியும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் சமீபத்திய முன்னேற்றமாக 2034 வரை காத்திருக்காமல் முன்கூட்டியே இத்திட்டத்தின் முதல் கட்டத்தை 2029-இல் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முக்கிய வியூகமாக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், அவற்றின் ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பாகவே சட்டப்பேரவைகளைக் கலைத்து விட்டு, '2029' மக்களவைத் தேர்தலுடன் இணைந்து தேர்தலை நடத்தும் வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.22 மாநிலங்களில், 17-இல் பாஜக தலைமையில் நேரடியாக ஆட்சி நடந்து வருகிறது. மற்ற 5-இல் பாஜகவுடன் கைகோத்துள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி உள்ளன. இதில், சுமார் 11 மாநிலங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. அங்கெல்லாம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், 2029-இல் அந்த சட்டப்பேரவைகளைக் கலைத்துவிட்டு மக்களவைத் தேர்தலோடு இணைந்து தேர்தல் நடத்தும் சாத்தியங்களை மத்தியில் ஆளும் பாஜக ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. அரசமைப்பு சட்டப் பிரிவு 174 (2) (பி) -இன்படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் ஆளுநரால் சட்டப்பேரவையைக் கலைக்க முடியும் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே, இதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகளை நோக்கி இனி வரும் நாள்களில் அரசியல் காய்கள் நகர்த்தப்படும் என்கின்றன அரசு வட்டாரங்கள்.'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான அரசமைப்பின் 129-ஆவது திருத்த மசோதாவை பி.பி.செüதரி (பாஜக எம்.பி.) தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு 2023, டிசம்பர் 19 முதல் ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குழு வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்துக்குள் அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.2027-இல் கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய 7 மாநிலங்களும், 2028-இல் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மிúஸôரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 9 மாநிலங்களும், 2029-இல் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரம், ஒடிஸô, ஜம்மு- காஷ்மீர், ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய 8 மாநிலங்களும், 2030-இல் தில்லி யூனியன் பிரதேசம், பிகார் மாநிலமும், 2031-இல் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸôம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவையும் தேர்தலை எதிர்கொள்கின்றன.இதில் மகாராஷ்டிரம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் பி.பி.சௌதரி குழு ஏற்கெனவே ஆலோசனைகளை நடத்தி கருத்துகளைப் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக உத்தர பிரதேசத்தில் கருத்து கேட்க சௌதரி குழு தீர்மானித்துள்ளது.இதற்கிடையே, தில்லியில் ஆக. 24-ஆம் தேதி நடைபெற்ற ஜேபிசி கூட்டத்தில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிலர் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளைப் பதிவு செய்தனர். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவே சட்டவிரோதமானது என்று சிதம்பரம் தனது தரப்பு வாதத்தை இக்கூட்டத்தில் பதிவு செய்தார். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சகாரிகா கோஷும் இதே கருத்தை பிரதிபலித்தார்.இந்த அரசமைப்புத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற, மத்திய அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. ஆனால், தற்போதைய சூழலில் அதற்கான நேரடி வாய்ப்புகள் அரசுக்கு இல்லை. இதைக் கருத்தில்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி ஆதரவு பலத்தை பெருக்க பாஜக வியூகங்களை வகுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அரசமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1951 முதல் 1967வரை மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான முதல் பொதுத் தேர்தல்கள் 1951-52-இல் இணைந்தே நடத்தப்பட்டன.இந்த நடைமுறை 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இருப்பினும், சில மாநில சட்டப்பேரவைகள், அவற்றின் பதவிக் காலம் காலாவதியாகும் முன்பே கலைக்கப்பட்டன. இதனால், 1968 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட 'ஒரே தேர்தல்' சுழற்சி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.