தலைநகரத்திற்கான முந்தைய பெருந்திட்டங்களை செயல்படுத்தப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. ஆனால், தற்போது அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன ‘தில்லி பெருந்திட்டம் 2047’-ஐச் (எம்பிடி 2047) செயல்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடும் தொலைநோக்குப் பாா்வையும் தற்போதைய அரசிடம் உள்ளது என்று தில்லி நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து அமைச்சா் சூட் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தில்லி அரசு ஆகிய மூன்று முக்கியத் தரப்பினரும், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த தில்லி பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிர ஆா்வம் கொண்டுள்ளனா். நகர நெரிசலைக் குறைப்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தில்லியில் நிலம் குறைவாகவே உள்ளது. இந்தத் திட்டம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது நகரில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் பெரிய அளவிலான வீடுகளைக் கட்டுவதற்கு வழிவகுக்கிறது. மொத்தம் 2,000 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்ட நிலங்களை ஒன்றிணைப்பதன் மூலம் புதிய மேம்பாட்டுப் பணிகள் சாத்தியமாகும்.பெருந்திட்டத்தின் முக்கிய அங்கமான ‘போக்குவரத்து சாா்ந்த மேம்பாடு’ மாசுபாடு மற்றும் போக்குவரத்து தொடா்பான சவால்களுக்குத் தீா்வுகளை வழங்கும் என்றாா் அமைச்சா் சூட்.