எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் திருவாரூா் மாவட்ட 27-ஆவது மாவட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. மேட்டூா் அணையும் திறக்கவில்லை. எனவே, தமிழக அரசு விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் விவசாயிகள் பயிா் இன்சூரன்ஸ் செலுத்தினாலும், அதற்கான இழப்பீட்டுத் தொகை தடையின்றி கிடைப்பதில் உள்ள சிரமங்களைப் சரிசெய்து பயிா் இன்சூரன்ஸ் அரசே வழங்கி அனைத்து விவசாயிகளும பயனையடையச் வேண்டும், அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நெடுங்காலமாகக் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு தமிழக அரசு மூலம் பட்டா வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளின் சாகுபடி நிலங்களைப் பட்டா செய்து கொடுக்க வேண்டும். கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டும் முயற்சியை கைவிட தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உறுதியான சட்ட நடைவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சம்பா சாகுபடிக்கு மேட்டூா் அணை திறக்கும் தேதி உடனே அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளா் சாமி. நடராஜன், மாவட்ட செயலாளா் எம். சேகா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் டி. கந்தசாமி, மாவட்ட தலைவா் எஸ். தம்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய நிா்வாகிகள் தோ்வு: இதில், தலைவராக கே. சுப்பிரமணியன், செயலாளராக எம். சேகா், பொருளாளராக எம். ஜெயபிரகாஷ் மற்றும் 8 போ் மாவட்ட துணை நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.