காஸா பகுதியில் பட்டங்கள், பலூன்கள், டிரோன்கள் போன்றவை பறக்கவிடப்பட்டால் அதனைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருத்தில் கொண்டு கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலை நோக்கி வான்வழியே ஏவப்படும் எந்தவொரு பொருளுக்கும் எதிர்வினை வழங்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பலூன்கள், பட்டங்கள், டிரோன்கள் போன்றவை வெடிபொருள்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பொருள்களை கொண்டு செல்லும் வாய்ப்பிருப்பதால் அவற்றை போர் நடவடிக்கையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் பல காகித பட்டங்கள் எல்லை தாண்டி வந்து குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பட்டங்களில் ஆபத்தான எந்தப் பொருளும் இல்லை என ராணுவ அதிகாரிகள் கூறினாலும், அவ்வாறு வரும் எந்தப் பொருள்களையும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், அதற்கு உதவுபவர்கள் என யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இஸ்ரேல் கட்ஸ் உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு இதேபோல பட்டங்கள், பலூன்கள் என இஸ்ரேல் பகுதிகளுக்குள் பறக்கவிடப்பட்டால் அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், தாக்குதலில் ஏவுகணைகள் ஏவப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.பட்டங்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கூறுவதை பாலஸ்தீன மக்களும், ஹமாஸ் அமைப்பினரும் மறுத்துள்ளனர். அங்கு பறக்கவிடப்படும் பட்டங்கள், பொழுதுபோக்குக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ள முகாம்களில் வாழும் குழந்தைகள் அவர்களே செய்து பறக்கவிடும் பொம்மை பட்டங்களே என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் தனது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்வதை நியாயப்படுத்த இஸ்ரேல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக பாலஸ்தீன அதிகாரிகளும் மனித உரிமை அமைப்புகளும் குறிப்பிடுகின்றனர். மேலும், இதனால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் முயல்வதாகவும் குற்றம் சாட்டினர். இஸ்ரேலின் உத்தரவைத் தொடர்ந்து, பாலஸ்தீனச் சிறுவர்கள் தாங்கள் செய்த பட்டங்களை தங்களின் கைகளாலேயே கிழிக்கும் காணொலிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், இஸ்ரேலின் தற்போதைய அறிவிப்பால் தெற்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Israel has warned against flying kites and balloons in Gaza.உயிருடன் உள்ளாரா மோஜ்தபா கமேனி? விடியோ வெளியிட்ட ஈரான்!