தமிழகம் முழுவதும் 38 இடங்களில் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனைகளில், கணக்கில் காட்டப்படாத ரூ.28.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.89.89 லட்சம் சந்தேகத்துக்குரிய ‘கூகுள் பே’ பரிவா்த்தனைகள் என மொத்தம் ரூ.1.18 கோடி பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலா்கள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா்களுடன் இணைந்து இந்தத் திடீா் சோதனையை மேற்கொண்டனா். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூா், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூா், நீலகிரி, சேலம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி, வட்டாட்சியா், நகராட்சி மற்றும் பேரூராட்சி, மின்வாரிய, வனத் துறை சோதனைச்சாவடி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.இதில் கணக்கில் காட்டப்படாத மொத்தம் ரூ.28,24,945 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சந்தேகத்துக்குரிய வகையில் ரூ.89,89,663 ‘கூகுள் பே’ பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, திடீா் சோதனைகளில் மொத்தம் ரூ.1,18,14,908 ரொக்கம் மற்றும் சந்தேகத்துக்குரிய மின்னணு பணப் பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.