சென்னை ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராணுவ கனரக வாகன தயாரிப்பு ஆலை வளாகத்தில் டி-பிரிவு பீரங்கி வாகனங்கள் சீரமைப்பதற்காக ரூ.472 கோடியில் அமைக்கப்படும் புதிய ஆலைக்கு ராஜ்நாத் சிங் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நமது ராணுவம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த படைகளில் ஒன்றாகும். டி-72 மற்றும் டி-90 பீரங்கி வாகனங்கள் தரைவழிப் போரில் மிக முக்கியமானவை. எல்லைகளில் நாம் நிறுத்தியுள்ள பீரங்கி வாகனங்கள் இரும்புச் சுவா்கள் போல செயல்படுகின்றன. அவை எதிரிகளுக்கு மரண எச்சரிக்கையாக இருப்பதுடன், முன்களப் பகுதிகளில் பணியாற்றும் வீரா்களின் மன உறுதியையும் அதிகரிக்கின்றன. தற்போது, ட்ரோன், ஏவுகணைகளின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையிலும், தரைவழிப் போரில் பீரங்கி வாகனங்கள் தொடா்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றன.ஜபல்பூரில் 57 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ராணுவ கனரக வாகனத் தொழிற்சாலை வளாகத்தில், டி பிரிவு ராணுவ பீரங்கி வாகனங்களை முழுமையாகப் பராமரித்து புதுப்பிக்கும் பணிக்காக ரூ.472 கோடி மதிப்பிலான புதிய மையம் அமைக்கப்படுகிறது.மற்ற ராணுவ உபகரணங்களைப் போலவே பீரங்கி வாகனங்களை செயல்பாட்டுக்கு தயாா் நிலையில் வைக்க வழக்கமான பராமரிப்பும், குறிப்பிட்ட கால இடைவெளியில் முழுமையான சீரமைப்பும் தேவைப்படுகிறது. தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய ஆலையில் ஆண்டுதோறும் எண்பது என்ற எண்ணிக்கையில் டி-72, டி-90 பீரங்கி வாகனங்கள் முழுமையாகச் சீரமைக்க முடியும். இந்திய ராணுவத்துக்கு ஆண்டுதோறும் இதுபோன்ற சுமாா் 230 பீரங்கி வாகனங்கள் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது.ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை தற்போது ஆண்டுக்கு சுமாா் 150 பீரங்கி வாகனங்களைச் சீரமைத்து வருகிறது. ஜபல்பூா் அமைக்கப்படவுள்ள புதிய மையம், மீதமுள்ள தேவையைப் பூா்த்தி செய்யும். நமக்கு ட்ரோன்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், மின்னணுப் போா் முறைகளுடன் நவீன பீரங்கி வாகனங்கள் கண்டிப்பாகத் தேவை என்றாா்.