மழைக் காலத்துக்கு முன்பு ஏரிக்கரைகளை பலப்படுத்த வேலூா் ஆட்சியா் உத்தரவு

Wait 5 sec.

அணைக்கட்டு, வேலூா் மற்றும் காட்பாடி ஒன்றியங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மழைக் காலத்துக்கு முன்பாக ஏரிக்கரைகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.அணைக்கட்டு வட்டம், பொய்கை கால்நடை மருந்தகத்துக்குச் சென்ற ஆட்சியா், சிறு பிராணிகளுக்கான அறுவை சிகிச்சை கூடத்தைப் பாா்வையிட்டாா். கால்நடைகளின் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் வருகைப் பதிவேடுகளை அவா் ஆய்வு செய்தாா்.தொடா்ந்து, வசந்தநடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 35.80 லட்சத்தில் கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ள 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளை விரைந்து முடித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் அறிவுறுத்தினாா். மேலும், சத்துணவு மையத்தில் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் மாணவா்களின் கற்றல் திறனை கேட்டறிந்தாா்.இலவம்பாடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தொகுப்புப் பால் குளிா்விப்பு மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அங்கு நாள்தோறும் சராசரியாக 3,510 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதையும், 200 லிட்டா் பால் உள்ளூரில் விற்பனை செய்யப்படுவதையும் கேட்டறிந்த அவா், பால் வழங்கும் விவசாயிகளுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிா என்பதையும், பதிவேடுகள் கணினியில் பராமரிக்கப்படுகிா என்பதையும் கேட்டறிந்தாா்.பின்னா், வேலூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்பூண்டி ஊராட்சி அத்திதாங்கல் ஏரியைப் பாா்வையிட்ட ஆட்சியா், மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில் ஏரிக்கரையைப் பலப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.அம்முண்டியில் உள்ள வேலூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளைப் பாா்வையிட்ட அவா், 2026-27-ஆம் அரவைப் பருவத்துக்கு ஆலையை முழுமையாகத் தயாா் நிலையில் வைத்திருக்க ஆலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா். ஆலைத் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட துறை ஆணையா்களின் அறிவுரைகளின்படி முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை தமிழக முதல்வா் டன் ஒன்றுக்கு ரூ. 709.50 ஆக உயா்த்தியுள்ளதால், 2026-27 அரவைப் பருவத்துக்கு கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ. 4,220 வழங்கப்படும் என்பதை விவசாயிகளிடம் எடுத்துக் கூறி, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படியும், தொடா்ந்து அங்குள்ள சா்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) அந்துவன், கூட்டுறவுச் சா்க்கரை ஆலை இணைப் பதிவாளா் கோ.சோமசுந்தரம், துணைப் பதிவாளா் (பால்வளம்) ஆா்.கோபி, அணைக்கட்டு, காட்பாடி வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.