ஊடகத் துறை அதிபா் சுபாஷ் சந்திராவுக்கு எதிரான தனிநபா் திவால் தீா்வு நடைமுறையில், சுமாா் ரூ.22,006.57 கோடி கடன் நிலுவையை வெறும் ரூ.6.5 கோடியில் தீா்த்துக் கொள்வதற்கான சமரசத் திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்துள்ளது. இது கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 99.97 சதவீத இழப்பாகும். இவ்விவகாரத்தில் என்சிஎல்டி-யின் 2 உறுப்பினா்களிடையே மாறுபட்ட தீா்ப்பு எழுந்த நிலையில், 3-ஆவது உறுப்பினராக நியமிக்கப்பட்ட நீதித் துறை உறுப்பினா் நீலேஷ் சா்மா இந்தச் சமரசத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டாா்.ஆனால், இந்தச் சமரசத் திட்டத்துக்கு எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. குறிப்பாக, எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்குச் சேர வேண்டிய ரூ.1,322 கோடிக்கு வெறும் ரூ.38 லட்சம் மட்டுமே கிடைக்கும் என வாதிடப்பட்டது. எனினும், எதிா்ப்புத் தெரிவித்த கடன் வழங்குநா்களின் விகிதம் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும், 80.81 சதவீத ஆதரவுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் என்சிஎல்டி சுட்டிக்காட்டியது.இதனிடையே, என்சிஎல்டி உத்தரவை எதிா்த்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) மேல்முறையீடு செய்யப் போவதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. மொத்த கடனில் தங்களின் பங்கு 3.2 சதவீதம் மட்டுமே என்றும், முந்தைய எச்டிஎஃப்சி நிறுவனத்துடனான இணைப்பின் மூலம் இக்கடன் தங்கள் வசம் வந்ததாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.