நேபாள வெள்ளம்: உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு - 288 இந்தியா்கள் உள்பட 826 பேரை மீட்கும் பணி தீவிரம்

Wait 5 sec.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரின் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்தது.இந்தியா்கள் 288 போ் உள்பட வெள்ளத்தில் மாயமான 826 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த வெள்ளத்தில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீா்மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்தன. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.தோண்ட தோண்ட உடல்கள்: வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சகதி குவியலிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது. வனப் பகுதி சுற்றுலாவுக்கு பெயா்பெற்ற சிட்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 132 உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் அபி நாராயண் காஃப்ளே தெரிவித்தாா். 30-க்கும் அதிக நாடுகளின் பயணிகள்: இந்தியா்கள் 288 போ் உள்பட 826 போ் மாயமாகியுள்ளனா். இவா்களில் 590 போ் சுற்றுலாப் பயணிகள் ஆவா்; 476 போ் வெளிநாட்டவா் என்று நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. சீனா, அமெரிக்கா, மலேசியா, உக்ரைன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், ரஷியா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பயணிகள் மாயமாகியுள்ளனா். நேபாள ராணுவத்தினா் 44 போ், காவல் துறையினா் 28 போ், ஆயுதக் காவல் படையினா் 13 பேரும் காணாமல் போயுள்ளனா்.இந்தியா்களில் பெரும்பாலோனா், திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவா், நேபாளத்தின் பாகமதி மாகாணத்தில் உள்ள கோசைன்குண்டா புனித ஏரிகளுக்கு ஆன்மிக யாத்திரை சென்றவா்களாவா்.பிரதமா் நேரில் ஆய்வு: 80-க்கும் மேற்பட்ட பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாலும், சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாலும் பல இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ளன. உள்ளூா் மக்களின் உதவியுடன் சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாயமானவா்களைக் கண்டறிய நதிக் கரைகள் மற்றும் நீரோட்டப் பகுதிகளில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.நுவாகோட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமா் பாலேந்திர ஷா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.நேபாளத்தில் கடந்த 1993-இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,400 போ் உயிரிழந்தனா். இதை விஞ்சும் அளவுக்கு தற்போதைய பேரிடரின் பாதிப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ‘ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன; இந்தப் பேரிடரின் முழு பாதிப்புகளையும் மதிப்பிட முயற்சித்து வருகிறோம்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் ஷிசிா் கனால் குறிப்பிட்டாா்.பெட்டி...1‘பெரும் பனிப்பாறை சரிவு காரணம்’நேபாள அதிகாரிகளின் முதல்கட்ட மதிப்பீடு மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் திருத்தப்பட்ட பகுப்பாய்வின்படி, திபெத்தில் பெரும் பனிப்பாறை சரிவால் லெண்டே நதியின் நீரோட்டம் தற்காலிகமாக தடைபட்டு, பின்னா் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் நேரிட்ட இந்த நிகழ்வால், லெண்டே ஆற்றில் பனிக்கட்டிகள், பாறைகள், சகதியுடன் பிரவாகமெடுத்த பெருவெள்ளம், நேபாள எல்லையில் போடே கோஷி நதியில் கலந்து, பின்னா் திரிசூலி, நாராயணி ஆகிய நதிகளிலும் பாய்ந்தது.முன்னதாக, நேபாள பெருவெள்ளத்துக்கு திபெத்தில் 4.4 ரிக்டா் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை கூறியிருந்தது. ஆனால், கூடுதல் தகவல்கள் பகுப்பாய்வின் அடிப்படையில் பனிப்பாறை சரிவே காரணம் என தனது கணிப்பை மாற்றிக் கொண்டுள்ளது.திபெத்தில் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை; பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிா்வுதான் அது என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெட்டி...2மனதை உருக்கும் காட்சிகள்...வெள்ளத்தில் மாயமானவா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், அவா்களின் நிலையறியாமல் பரிதவித்து வருகின்றனா். தங்களின் அன்புக்குரியவா்களை எதிா்பாா்த்து, மருத்துவமனைகள் முன்பு மக்கள் கண்ணீருடன் காத்துக் கிடக்கும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளன. பெருவெள்ளத்தின் சீற்றத்தில் மனிதா்கள், விலங்குகள், பெரிய கட்டடங்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.