தமிழகத்துக்கான கல்வி நிதி: மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

Wait 5 sec.

தமிழகத்துக்கான கல்வி நிதி ரூ.5,109 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.1,496 கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பெயரளவுக்கு கல்வி உரிமைச் சட்டத் திட்டத்துக்கு ரூ.714 கோடியை மட்டும் விடுவித்துள்ளது. மத்திய அரசின் நிதி உதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கி பள்ளிகளை நடத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியா் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்பு பணிகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன. எனவே, தமிழகத்துக்கான ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.