நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 57 தமிழர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 105 இந்தியர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலமாக நேபாளம் சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 37 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். நேபாள காவல்துறையினர், மீட்புப் படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உதவி எண்கள் அறிவிப்பு! நேபாளம் பெரு வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து அறிய தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான உதவி எண் - 1800 309 3793 வெளிநாடு உதவி எண்கள் - +91 8069009901, 08069009901மிஸ்டு கால் அழைப்புக்கு +91 8069009900 / 8069009900 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Nepal flood: helpline numbers announced for tamils