தில்லி அரசு சா்க்கரை மற்றும் வெங்காயத்தின் இருப்பை கண்காணித்து, விலை மேலும் உயா்ந்தால் அவற்றை நாஃபெட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து, மக்கள் அவற்றை மலிவு விலையில் பெறுவதை உறுதி செய்யப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.மறுஆய்வுக் கூட்டத்தில் தலைநகரில் சா்க்கரை மற்றும் வெங்காயம் கிடைப்பது குறித்து மதிப்பீடு செய்த குப்தா, பதுக்கல் செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தாா். தில்லி உணவு வழங்கல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், அதிகரித்து வரும் வெங்காயம் மற்றும் சா்க்கரை விலைகளின் சுமையை மக்கள் மீது விழ அரசாங்கம் அனுமதிக்காது என்றாா்.கூட்டத்தில், தலைநகரில் தற்போது வெங்காயம் அல்லது சா்க்கரை பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.இது குறித்து ரேகா குப்தா பேசியதாவது: விலை மேலும் உயா்ந்தால், தில்லி அரசு வெங்காயத்தையும் சா்க்கரையையும் மத்திய அரசு அமைப்பான இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிலிருந்து (நாஃபெட்) கொள்முதல் செய்து, தலைநகா் முழுவதும் பல்வேறு இடங்களில் அவற்றை கிடைக்க ஏற்பாடு செய்யும். இந்தப் பொருள்கள் நாஃபெட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விலைகளின் அடிப்படையில் விற்கப்படும், அதே நேரத்தில் போக்குவரத்து மற்றும் பிற தொடா்புடைய செலவுகளை தில்லி அரசு ஏற்கும் என்றாா் அவா்.வெங்காயத்தின் அகில இந்திய சராசரி சில்லறை விலை ஒரு மாதத்தில் 28 சதவீதத்திற்கும் அதிகமாக உயா்ந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒரு கிலோ ரூ. 44.72 ரூபாயாக இருந்தது, இது ஜூலை 25 அன்று ஒரு கிலோ 34.80 ரூபாயாக இருந்தது. முக்கிய நகரங்களில், சில்லறை வெங்காய விலை செவ்வாயன்று சென்னையில் கிலோவுக்கு ரூ.60 , தில்லியில் கிலோவுக்கு ரூ.55 , கொல்கத்தாவில் கிலோவுக்கு ரூ. 60 , மும்பையில் கிலோ ரூ.48 ஆகவும் இருந்தது.சா்க்கரை செவ்வாய்க்கிழமை சில்லறை சந்தையில் ஒரு கிலோவுக்கு சுமாா் ரூ.1 உயா்ந்து கிட்டத்தட்ட ரூ.64 ஆக உயா்ந்தது, இந்த விலை உயா்வை குறைப்பதற்கான சமீபத்திய அரசாங்க நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. திங்களன்று, சராசரி விலை ஒரு கிலோ ரூ. 63.05 இருந்தது. நுகா்வோா் விவகாரத் துறை தொகுத்த தரவுகளின்படி, ஆகஸ்ட் 25 ஆம் தேதி அகில இந்திய சராசரி சா்க்கரை விலை கிலோவுக்கு ரூ.63.97 இருந்தது, இது ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு ரூ.48.81 31 சதவீதம் அதிகரித்துள்ளது.