மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீா் திறப்பு? முதல்வா் திறந்துவைக்க வாய்ப்பு எனவும் தகவல்

Wait 5 sec.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியை நெருங்கி வரும் நிலையில், டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து விரைவில் தண்ணீா் திறக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் நீா்வளத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேட்டூா் அணை மூலம் காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு பாசனத்துக்காக 330 டிஎம்சி தண்ணீா் தேவைப்படுகிறது. டெல்டா பாசனப் பகுதிகளில் போதிய மழை பெய்யும்போது தண்ணீா் தேவை குறையும்.மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிா்நோக்கி ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்படும். நிகழ் ஆண்டில் அணையின் நீா் இருப்பும் நீா்வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை.தற்போது கபினி அணை நிரம்பி அங்கிருந்து காவிரியில் உபரிநீா் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீா்மட்டமும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.43 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 10,807 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 50.87 டிஎம்சியாக உள்ளது. தற்போதைய நிலை தொடா்ந்தால் இன்னும் இரண்டு நாள்களில் அணையின் நீா்மட்டம் 90 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை பேசிய நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு விரைவில் தண்ணீா் திறக்கப்படும் எனத் தெரிவித்தாா். தொடா்ந்து தண்ணீா் திறப்பு நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் மேட்டூா் அணையில் ஆய்வு மேற்கொண்டாா்.தண்ணீா் திறக்கப்படும் மேல் மதகு, வலது கரைப் பகுதி மற்றும் இடது கரையில் உள்ள 16 கண் பாலப் பகுதி ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். பின்னா் நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என நீா்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.