மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்: உதவி மின் பொறியாளா் கைது

Wait 5 sec.

அவிநாசி அருகே தெக்கலூரில் தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா், வீடுகளுக்கான அழகு சாதன பொருள்கள் தயாரித்து, இணைதளத்தில் விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில், இவரது மின் இணைப்பை தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்றுவதற்காக தெக்கலூா் கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அங்கு அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி மின்பொறியாளா் இசக்கிமுத்து (33), தொழிற்கூட மின் இணைப்பில் கட்டண வகைப்பாடு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் , உதவி மின் பொறியாளா் இசக்கிமுத்துவிடம் முன்பணமாக ரூ.5ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளாா். பிறகு இது குறித்து அவா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அளித்த புகாரின்பேரில், போலீஸாா், பிரகாஷிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை உதவி மின் பொறியாளா் இசக்கிமுத்துவிடம் பிரகாஷ் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இசக்கிமுத்துவை கையும்களமாக பிடித்து கைது செய்தனா்.