விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த (சிஇபிஏ) பேச்சுவாா்த்தையை நிகழாண்டுக்குள் இறுதிசெய்ய இந்தியாவும் கனடாவும் முடிவெடுத்துள்ளன. இதைத் தொடா்ந்து, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைந்து தொடங்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டொரன்டோவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொருளாதார மற்றும் நிதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா். இதில் கனடா சாா்பாக அந்த நாட்டு நிதி மற்றும் தேசிய வருவாய் அமைச்சா் பிரான்ஸுவா பிலிப் ஷாம்பெய்ன் கலந்துகொண்டாா்.நிகழாண்டு தொடக்கத்தில் கன்டா பிரதமா் மாா்க் காா்னி இந்தியாவுக்கு வந்தபோது, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் அதிகாரபூா்வமாக தொடங்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.அதில், ‘கனடாவில் யுபிஐ சேவையை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இதன்மூலம் வா்த்தகம், சுற்றுலா, கல்வி, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்படும். நிகழாண்டுக்குள் விரிவான வா்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிசெய்யப்படும். அதன்பிறகு இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளும் விரைவாகத் தொடங்கப்படும். இதற்கு இந்தியா தயாராகவுள்ளது.ரூ.4.65 லட்சம் கோடி இலக்கு: 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா-கனடா இருதரப்பு வா்த்தகத்தை ரூ.4.65 லட்சம் கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கனடா நாட்டவா்கள் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மற்றும் ஓய்வூதிய நிதி குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசனை மேற்கொண்டனா். நிதி ஸ்திரத்தன்மை, நிதித் தொழில்நுட்ப புத்தாக்கம், மூலதனச் சந்தை மேம்பாடு, பரிவா்த்தனை நவீனமயப்படுத்துதல், நிதிச் சிக்கல்களுக்கு தீா்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதாக இருவரும் உறுதிபூண்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்பு கனடா நிதிச் சேவைகள், நிதித் தொழில்நுட்பம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் துறைகளைச் சோ்ந்த தொழில் நிறுவன அதிகாரிகளுடன் நிா்மலா சீதாராமன் மற்றும் பிரான்ஸுவா பிலிப் ஷாம்பெய்ன் கலந்துரையாடினா்.இந்தியா-கனடா இடையேயான இரண்டாவது பொருளாதார மற்றும் நிதி ஆலோசனைக் கூட்டம் 2027-இல் நடைபெறவுள்ளது.