திருப்பூா் நொய்யல் ஆற்றை சீரமைக்க விரைவில் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா். நொய்யல் ஆற்றை மீட்பது தொடா்பாக திருப்பூா் தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ எஸ்.பாலமுருகன் பேரவையில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு, அமைச்சா் ஆனந்த் அளித்த பதில்: நொய்யல் ஆறு, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைத்தொடரில் உருவாகி, கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்கள் வழியாக சுமாா் 158 கி.மீ. தொலைவு பயணித்து, கரூா் மாவட்டம், நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீா் நொய்யல் ஆற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.திருப்பூா் மாநகராட்சி பகுதிக்குள் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான பகுதியில், நீண்ட காலமாக ஓடைகள் மற்றும் மழைநீா் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் கலந்ததால் ஆகாயத்தாமரை, சீமைக் கருவேலம் மற்றும் பிற செடிகள் அதிக அளவில் வளா்ந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி, நொய்யல் ஆறு புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடியில் விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் அவா்.