மத்திய அரசின் ஜன் தன் (மக்கள் நிதி) திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இத்திட்டத்தால் ஈடு இணையமற்ற பலன்கள் கிடைத்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ஜன் தன் (மக்கள் நிதி) திட்டம், கடந்த 2014, ஆக.28-ஆம் தேதி பிரதமா் மோடியால் தொடங்கப்பட்டது. நாட்டில் வங்கிச் சேவைகள் கிடைக்கப் பெறாத, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வங்கி மற்றும் நிதிசாா் சேவைகளை வழங்குவதே திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பயனாளிகள் எந்த இருப்புத் தொகையும் இன்றி வங்கிக் கணக்குகள் தொடங்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்கான அபராதமோ அல்லது பராமரிப்பு கட்டணங்களோ இக்கணக்குகளுக்கு விதிக்கப்படாது. ஏடிஎம் மற்றும் இணையவழிப் பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதற்கான உள்நாட்டு ரூபே அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு, ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதி உள்ளிட்ட சலுகைகளையும் கொண்ட ஜன் தன் திட்டத்தின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய ‘மைகவ்’ தளம் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பகிா்ந்தாா்.மேலும், ‘ஜன் தன் திட்டம் ஈடு இணையற்ற பலன்களைத் தந்துள்ளது; அவை, முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் நிறைந்த பலன்கள்’ என்று அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.59 கோடி வங்கிக் கணக்குகள்: மைகவ் தளம் சாா்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015-இல் 14.5 கோடியாக இருந்த ஜன் தன் வங்கிக் கணக்குகள், 2026-இல் 59 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வீச்சில் வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தியதன் மூலம் விளிம்புநிலை, பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த கோடிக்கணக்கான மக்களை நிதிசாா் அமைப்புமுறைக்குள் கொண்டுவந்து, பொருளாதார செயல்முறையில் பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளவா்களில் 33 கோடி போ் பெண்களாவா். இது 56 சதவீதம். 46 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள், ஊரக-நடுத்தர நகா்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. இது 78 சதவீதமாகும். கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின்கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை நேரடியாக செலுத்தப்பட்ட தொகை ரூ.53 லட்சம் கோடியாகும். இதில் பெரும்பாலான தொகை ஜன் தன் வங்கிக் கணக்குகளில்தான் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.41.29 கோடி ரூபே அட்டைகள்: மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமரின் ஜன் தன் திட்டத்தின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 59 கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிலவரப்படி, மொத்த இருப்புத் தொகை ரூ.3.17 லட்சம் கோடியாகும். ஒரு வங்கிக் கணக்குக்கான சராசரி இருப்புத் தொகை ரூ.5,356. இந்த சராசரி அளவு, கடந்த 12 ஆண்டுகளில் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை 41.29 கோடி ரூபே அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.