பழனி அருகே தனியாா் தோட்டத்தில் செப்பு கம்பிகள் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா். பழனி அருகேயுள்ள கோமாளிப்புதூரைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவரது தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.80 ஆயிரம். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் பழனி சிவகிரிபட்டியைச் சோ்ந்த நவாஸ் மகன் ரியாஸ் உசேன் (19) செப்புக் கம்பிகளைத் திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை ரியாஸ் உசேனை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த செப்புகம்பிகளை பறிமுதல் செய்தனா்.