'கிரிட்டிகாலிட்டிச்' வெற்றி!

Wait 5 sec.

அணுமின் சக்தி ஆபத்தானது என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. முடிந்தவரையில் உலகம் அணுசக்தியை சாராமல் இயங்க வேண்டும் என்பதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அதிகரித்துவரும் நமது மக்கள்தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் அணுமின் சக்தியை முற்றிலுமாக அகற்றி நிறுத்த முடியாத தர்மசங்கடத்தில் நாம் இருக்கிறோம்.மிக விரைவாக வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறி இருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், நமது எரிசக்தி உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.இப்போதைய நிலையில் நமது எரிசக்தித் தேவையில் அணுமின் சக்தியின் பங்களிப்பு வெறும் 3% மட்டுமே. உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் சுமார் 60-க்கும் அதிகமான அணுமின் உலைகள் நிறுவப்படுகின்றன. அந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் அணுமின் சக்தி உற்பத்தியை நாம் அவதானிக்க வேண்டும்.கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா தனது அணு ஆற்றல் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முன்மாதிரி வேகப்பெருக்கி அணு உலை (முன்மாதிரி அதிவேக ஈனுலை ) ஏப்ரல் 6- ஆம் தேதி முதல்முறையாக தனது ஒரு தொடர்ச்சியான அணுச் சங்கிலி வினையை (கிரிட்டிகாலிட்டி) வெற்றிகரமாக எட்டியது.'கிரிட்டிகாலிட்டி' என்பது நீடித்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அணுப் பிளவு சங்கிலி வினை தொடங்கும் நிலை. இந்த நிலையில், நிலையான ஆற்றல் வெளிப்படுகிறது. இது வெப்பத்தையும், இறுதியில் மின்சாரத்தையும் உற்பத்தி செய்வதற்கான இன்றியமையாத முதல்படி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சாதனையின் மூலம் இந்தியா தனது மூன்று கட்ட அணு மின்சாரத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ளது.இந்தியாவில் யுரேனியம் இருப்பு குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில் உலகிலேயே மிகப் பெரிய தோரியம் இருப்பு (தமிழக, கேரள கடற்கரை மணலில்) உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்ள தோரியத்தின்மூலம் ஆண்டுதோறும் 500 ஜிகாவாட் மின்சாரம் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.இந்த வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்காக, இந்திய அணுசக்தித் துறை மூன்று கட்ட அணு மின்சார திட்டத்தை வடிவமைத்தது. அதில் ஒன்றுதான் முன்மாதிரி வேகப் பெருக்கி அணு உலை. இது பல பத்தாண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் பொறியியலின் பலன்.வழக்கமான வெப்ப அணு உலைகளைப் போலல்லாமல், இந்த முன்மாதிரி அதிவேக ஈனுலை, யுரேனியம்- புளூட்டோனியம் கலப்பு ஆக்ûஸடு எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இங்கு யுரேனியம்-238, புளூட்டோனியம்-239-ஆக மாற்றப்படுகிறது. இதன்மூலம் அணு உலை அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய முடிகிறது.இந்த அணு உலை, இறுதியில் தோரியம்-232-ஐ பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருமாற்றத்தின் மூலம், தோரியம்-232, யுரேனியம்-233-ஆக மாற்றப்படும். இது தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்றாவது அணுசக்தி நிலைக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அதிவேக ஈனுலை மூலம் உருவாகும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள், மறுசெயலாக்கம் செய்யப்பட்டு மீண்டும் அணு உலையில் மறுசுழற்சி செய்யப்படும். இதன்மூலம், இரண்டாம் நிலையைத் தொடர்ந்து, மூன்றாம் நிலையில் இந்தியாவின் மிகுந்த தோரியம் வளங்களைப் பெரிய அளவில் பயன்படுத்துவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.இந்த முன்மாதிரி அதிவேக ஈனுலை, மிக ஆபத்தான திரவ சோடியத்தை குளிர்விப்பானாகவும், புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட தொழில்நுட்பம் என்பதால், உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டுவிட்டன. ஆனால், நமது விஞ்ஞானிகள் இந்த திரவ சோடியத்தைக் கையாளும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளனர். முன்மாதிரி அதிவேக ஈனுலை 'கிரிட்டிகாலிட்டி'யை அடைந்தது ஒரு தொழில்நுட்ப மைல்கல்.ஹைட்ரஜன்தான் எதிர்காலத்தின் எரிபொருள். கடந்த ஜூன் 26 அன்று உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை கல்பாக்கத்தில் திறந்து மீண்டும் ஒரு பெரிய அதிசயத்தை நமது விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.தண்ணீரைப் பிரித்து சுத்தமான ஹைட்ரஜனை உருவாக்க, மிகப் பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படும். அதற்காக, நாம் நிலக்கரியை எரிக்க வேண்டும். அதைத் தவிர்க்க நமது விஞ்ஞானிகள் ஓர் அற்புதமான வழியைக் கண்டுபிடித்தனர். அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது வெளியேறும் மிகப் பெரிய வெப்பத்தை வீணாக்காமல், நேரடியாக தாமிரம்- குளோரின் சுழற்சியைப் பயன்படுத்தி தண்ணீரைச் சூடாக்கி பிரித்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்துள்ளனர்.எந்த மாசுபாடும் இல்லாமல், கார்பன் உமிழ்வு இல்லாமல், அணுசக்தியைப் பயன்படுத்தி உலகின் மிகச் சுத்தமான ஹைட்ரஜனை உற்பத்தி செய்து உலகுக்கு இந்தியா வழிகாட்டியுள்ளது.எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.திருக்குறள் (எண் 666) அதிகாரம்: வினைத்திட்பம்