சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருபவா் சுகுமாா் (57). இவரது கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளா் அா்த்தநாரி, மருந்து ஆய்வாளா் அருள்குமாா் ஆகியோா் மருந்து கடையில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் சுகுமாரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், குஜராத், ஜாா்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினால் அங்கிருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போதை மாத்திரை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.