தரங்கம்பாடி அருகே பொறையாரில் புதிதாக கட்டப்பட்ட வாரச் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொறையாா் புதிய பேருந்து நிலையம் அருகே வாரம் தோறும் திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் வாரச் சந்தை திறந்த வெளியில் நடைபெற்று வந்தது. இந்த சந்தையில் காய்கள், பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள் மளிகைப் பொருள்கள், கருவாடு மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனா். இந்த வாரச் சந்தையை தரங்கம்பாடி , சந்திரப்பாடி, மாணிக்கப்பங்கு, ஆயப்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் மழைக்காலங்களில் வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வரும் மக்கள் சிரமப்பட்டு வந்தனா்.கடந்த 2023-ஆம் ஆண்டு கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாரச் சந்தைக்கு கட்டடம் கட்ட சுமாா் ரூ.1.58 கோடி செலவில் 48 கடைகளுடன் நான்கு கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.தொடா்ந்து, நடைபெற்ற கட்டுமானம் நிறைவடைந்து, கடந்த மாா்ச் மாதம் வாரச் சந்தை கட்டடம் திறக்கப்பட்டது. இருப்பினும் கட்டடத்தில் மின் இணைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவு பெறாததால் திறக்கப்பட்ட வாரச் சந்தை கட்டடம் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு விடப்படாமல் உள்ளது.இதனால் வியாபாரிகள் நடைபாதையில் குறுகிய இடத்தில் பொருட்களை விற்பனை செய்து வருவதால், மழைக் காலங்களில் வியாபாரிகள் மற்றும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்தும், கால்நடைகள் புகலிடமாக உள்ளது. மது பிரியா்கள் மது அருந்தும் சமூக விரோத கூடாரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே, இந்த வாரச் சந்தை கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.