விருத்தாசலத்திலிருந்து கவிஞர் பல்லவிகுமார் வெளிக்கொணரும் 'தமிழ்ப் பல்லவி' காலாண்டு இலக்கிய இதழ் குறித்து இதற்கு முன்பும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் வெளிவந்த சில கவிதைகளையும் கதை-கட்டுரைகளையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். விருத்தாசலத்தில் இருந்தபடி அவர் நிகழ்த்தும் இலக்கியப் பணி பொறாமையை ஏற்படுத்துகிறது. வெகுஜன ஊடகங்களின் போதாமையையும் வெளிப்படுத்துகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், வெளிநாடுகளில் வாழும் நமது தொப்புள் கொடி உறவினர்களான தமிழர்களும், அவரவர் வகையில் தமிழ்ப் பணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தாய்த் தமிழகத்தில் கலை, இலக்கியம், சினிமா, அரசியல் குறித்த புரிதலும் அவற்றின் மீதான ஈடுபாடும் அவர்களுக்கு நிரம்பவே இருக்கிறது. தாயகத் தமிழ் ஆளுமைகள் குறித்தும், நமது செயல்பாடுகள் குறித்தும், வெளிநாடுவாழ் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் தெரிந்து வைத்திருப்பதைப்போல, அவர்கள் குறித்து நமக்குத் தெரியாமல் இருக்கிறது. உலகளாவிய அளவில் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும், நமது கலாசார விழுமியங்களையும் அவர்கள் பாதுகாக்கிறார்கள் என்கிற உண்மையை நாம் மறந்து விடுகிறோம். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், அமெரிக்கா, கனடா என்று ஆங்காங்கே வாழும் தமிழர்கள் இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தி தங்களது தமிழ் தாகத்துக்கு வடிகால் தேடிக் கொள்கிறார்கள். அவர்களது படைப்புகளையும் செயல்பாடுகளையும் தாய்த் தமிழகம் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுடன், அங்கீகரித்துப் பாராட்டாமலும் இருக்கிறது. இந்தக் குறை அவர்களுக்கு நிறையவே உண்டு. தாய்த் தமிழகத்துக்கும், புலம்பெயர்ந்த தொப்புள் கொடி உறவுகளுக்குமான இடைவெளியை இணையதளத்தின் வருகை ஓரளவு குறைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நமது தமிழ் ஊடகங்களில் அவர்களது பங்களிப்புகள் அதிக அளவில் இடம்பெறாமல் இருப்பதை மறுக்க முடியாது. தமிழ்ப் பல்லவி காலாண்டு இலக்கிய இதழின் ஏப்ரல் }செப்டம்பர் 2026 இதழ் "இலங்கை தமிழ் இலக்கியச் சிறப்பிதழாக' வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருக்கின்றன. இதன்மூலம் தாய்த் தமிழகத்துக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத இலக்கியங்கள் இலங்கைத் தமிழர்களாலும் படைக்கப்படுகின்றன என்பதை உணர்த்த முற்பட்டிருக்கிறது "தமிழ்ப் பல்லவி'. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரன் பிள்ளை, சேவியர் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட சான்றோர்கள் கடந்த நூற்றாண்டில் தமிழ்த் தொண்டு புரிந்தனர் என்றால், இந்த நூற்றாண்டில் நவீன தமிழ் இலக்கியத்துக்கும் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு தொடர்கிறது என்பதை தாய்த் தமிழகத்துக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறது "தமிழ்ப் பல்லவி' வெளிக்கொணர்ந்திருக்கும் "இலங்கை தமிழ் இலக்கியச் சிறப்பிதழ்'. உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கிறிஸ்டோபர் நோலன் எழுதி இயக்கிய " ஒடிஸி'.இந்தத் திரைப்படத்தை நான் நான்கு தடவைகள் பார்த்து விட்டேன் என்று சொன்னால், பலரும் புருவம் உயர்த்துவார்கள். நான்கு முறை பார்ப்பதற்கு ஒரு திரைப்படத்தில் அப்படி என்னதான் இருந்துவிட முடியும் என்று சிலர் எள்ளி நகையாடிடக்கூடும்.சினிமா என்கிற காட்சி ஊடகத்தை ஒரு கலைப் படைப்பாக ரசிக்கும் ஒரு சிலரால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். திரைக்கதை, வசனத்தின் நேர்த்திக்காக; கதாபாத்திரங்களின் நடிப்புக்காக; காட்சியமைப்பு, ஒளிப்பதிவுக்காக; பின்னணி இசை, படத்தொகுப்பின் நுணுக்கத்துக்காக என்று நல்ல திரைப்படத்தை நான்கு பிரிவுகளாகப் பார்த்து ரசிக்க முடியும். கர்ணன், தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்களை மிகவும் பிரம்மாண்டமாக கிறிஸ்டோபர் நோலன்போல எடுக்க முடிந்திருந்தால், அவையும் "ஒடிஸி' போல இருந்திருக்கும்.ஏதோ ஒரு திரையரங்கில், ஏதோ சில மணிநேரம் பொழுதுபோக்காக "ஒடிஸி' திரைப்படத்தைப் பார்த்துவிட முடியாது. "ஐ மேக்ஸ்' எனப்படும் பெரிய திரைகள் உள்ள திரையரங்குகளில் பார்த்தால்தான் அதன் பிரம்மாண்டமும், முழுப் பரிமாணமும் தெரியும். மகாபாரதத்தைச் சுருக்கமாக எப்படி திரையில் காட்சிப்படுத்த முடியாதோ, அதேபோலத்தான் ஹோமரின் "ஒடிஸி' காவியத்தைத் திரைப்படுத்தும் முயற்சியும். ஒரு முறை பார்த்தால் இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் விதத்தில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் கிறிஸ்டோபர் நோலனின் வெற்றி.ஹோமர் இயற்றிய "இலியட்' காப்பியத்தின் நீட்சியாக, "ட்ராய்' யுத்தத்துக்குப் பிறகு நடந்த இதாகா மன்னர் ஒடிஸியஸின் சாகஸங்களும், அவர் நாடு திரும்புவதும்தான் "ஒடிஸி' காப்பியம். கிரேக்கக் காப்பியமான "இலியட்', "ஒடிஸி' இரண்டிலுமே நமது ராமாயண, மகாபாரதத்தில் காணப்படும் பல நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன என்பது கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' அறைகூவலை வலுப்படுத்துகின்றன.கிறிஸ்டோபர் நோலனின் "ஒடிஸி' திரைப்படம் ஹோமர் எழுதிய காப்பியத்தின் பல பகுதிகளைச் சுருக்கியும் மாற்றியும் பின்னப்பட்ட திரைக்கதை வடிவம். ஹோமர் எழுதிய "ஒடிஸி' குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு பரிந்துரை:} ஹோமரின் "ஒடிஸி' என்கிற காவியத்தை மூலக் கதையைச் சிதைத்து விடாமல் அனந்த சாய்ராம் ரங்கராஜன் தமிழில் நூலாகச் சுருக்கித் தந்திருக்கிறார். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டும் திரைப்படம் பார்க்கலாம்; திரைப்படம் பார்த்துவிட்டும் படிக்கலாம்; முன்னதைவிடப் பின்னதுதான் எனது பரிந்துரை.கவிஞர் ச. ஆனந்தகுமார் வெளிக்கொணர்ந்திருக்கும் கவிதைத் தொகுப்பு, "முத்தமிடும் கூழாங்கற்கள்" . விமர்சனத்துக்கு வந்திருந்த அந்தத் தொகுப்பில் இடம்பெறுகிறதுஇந்தக் கவிதை:முதன்முறை நாற்காலிபிடிப்பதற்கு மட்டும்தான்கொள்கைகளுடன் கொஞ்சம்சமரசம் செய்துகொள்ளவேண்டிவந்தது...தக்கவைத்துக் கொள்ளும்வித்தைகளையெல்லாம்அமர்ந்திருக்கும் நாற்காலியேகவனித்துக் கொண்டது.