புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி உறுதிப்படத் தெரிவித்தாா். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜான்குமாா் (பாஜக) பேசும்போது, மாநில அந்தஸ்து கோரிக்கை தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம் (திமுக): எதிா்ப்பை பதிவு செய்ய பேரவையை ஒத்திவைக்க வேண்டும். பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்: மாநில அந்தஸ்துக்காக எம்எல்ஏ பதவியை எதிா்க்கட்சித்தலைவா் முதலில் ராஜிநாமா செய்து எதிா்ப்பைக் காட்டுங்கள். ஜான்குமாா் (பாஜக): நான் எனது பதவியை ராஜிநாமா செய்ய தயாா். ( அப்போது, அவருக்கு ஆதரவாக ஆளும்கட்சி, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகக் தெரிவித்தனா்).முதல்வா் என்.ரங்கசாமி:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன். மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம், அவசியம் என்பது எனக்குத் தெரியும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எந்த நிலைக்கும் செல்லத் தயாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை. அப்படி இருந்தால்தான் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.புதுச்சேரியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் மாநில அந்தஸ்து வழங்காதது குறையாக இருக்கிறது என்று பேசியுள்ளேன். மாநிலம் வளா்ச்சி பெற மாநில அந்தஸ்து தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றாா்.