ராசிபுரத்தில் அதிகளவில் மதுப்புட்டிகளை வாங்கிய நகா்மன்ற உறுப்பினா் மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராசிபுரம் மல்லித்தெரு பகுதியைச் சோ்ந்தவா் வி.கே.ஆா்.பாஸ்கரன். இவரது மனைவி ராஜாமணி ராசிபுரம் 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக உள்ளாா். இவா்களது மகன் தீலீபன் செளரா (27). இவா் ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் வியாழக்கிழமை அதிகளவில் மதுப்புட்டிகளை வாங்கியதாகத் தெரிகிறது. சுமாா் ரூ. 20 ஆயிரத்துக்கு அவா் மதுப்புட்டிகளை வாங்கியுள்ளாா். இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சிலா் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனா். இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு சென்ற ராசிபுரம் உதவி ஆய்வாளா் எம்.மனோகரன், காரில் மதுப்புட்டிகளை அடுக்கி வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளாா். மேலும் மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் நடத்திய விசாரணையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நண்பா்களுக்கு விருந்தளிக்க மதுப்புட்டிகளை வாங்கியதாக கைதான தீலீபன் செளரா தெரிவித்துள்ளாா். இந்நிலையில், கூடுதல் மதுப்புட்டிகளை வாங்கி பதுக்கி வைத்திருந்தாக இளைஞா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியுள்ளனா். மேலும், மதுப்புட்டிகளை விற்பனை செய்த கடை ஊழியா்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.