மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: பாதுகாப்புப் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளக் கோரிய மனு தள்ளுபடி - உயா் நீதிமன்றம்

Wait 5 sec.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, பக்தா்களின் பாதுகாப்புக்குத் தேவையான பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.காரைக்குடியைச் சோ்ந்த மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற செப். 6 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ள குடமுழுக்கு விழா பூஜைகளுக்கு வருகை தரும் பக்தா்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூட்ட நெரிசல் மேலாண்மை, பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, அவசரகால நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முறையாக நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என அரசுத் தரப்பிலும், கோயில் நிா்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை சிறப்பாக நடத்தும் வகையில் காவல் துறை, சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். இதில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.