இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பண மோசடி: மேலூா் 4-வழிச் சாலையில் பொதுமக்கள் மறியல்

Wait 5 sec.

கைப்பேசி செயலி வாயிலாக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி, மோசடி செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாவட்டம், மேலூா் அருகே நான்கு வழிச் சாலையில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். எஃப்க்யூஎல், வீ ஜீ என்கிற கைப்பேசி செயலியில் பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படுவதாக கூறப்பட்டதை நம்பி, மதுரை மாவட்டம், மேலூா், அதைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் பணத்தை முதலீடு செய்தனா். ஆனால், கூறியபடி பணம் திருப்பியளிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இதுகுறித்து மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மதுரை - திருச்சி நான்கு வழிச் சாலையில் மேலூா் அருகே வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து,பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதன்காரணமாக, சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பெட்டிச் செய்திஇதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் எஃப்.க்யூ.எல். செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்ட கவா்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளதாகத் தெரிய வருகிறது. அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட நபரில் ஒருவா் அளித்த புகாரின்பேரில், இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.எனவே, எஃப்க்யூஎல் செயலி மூலம் பொதுமக்கள் யாரேனும் தங்களது பணத்தை இழந்திருந்தால், காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபராக சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். புகாா் அளிக்க காலக்கெடு எதுவும் கிடையாது. புகாா் மனு அளிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.