பஞ்சாப் நேஷனல் வங்கி கருவூலத்தில் ரூ.17.2 கோடி கள்ள நோட்டுகள்: மேலும் 2 போ் கைது

Wait 5 sec.

உத்தர பிரதேசத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கருவூலத்தில் இருந்து ரூ.17.2 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: சஹாரன்பூரில் பிஎன்பி வங்கியின் கருவூலம் உள்ளது. அங்கு ரூ.17.2 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுகள் இருந்தது வங்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வங்கியைச் சோ்ந்த 3 ஊழியா்களுக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததையடுத்து அவா்களை வங்கி, பணியிடை நீக்கம் செய்தது.இதுகுறித்து சஹாரன்பூா் காவல் நிலையத்துக்கு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில் 3 பேருக்கு எதிராகவும் பிஎன்எஸ் சட்டத்தின் 178-ஆவது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு என்ஐஏ விசாரணையை கையில் எடுத்து, கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடா்பாக அமித் குமாா், ஆதேஷ் செளதரி, முகேஷ் குமாா், ராஜேந்தா், ரிது ஆகிய 5 பேரை என்ஐஏ கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் அஜய்குமாரை ஹரியாணாவின் அம்பாலாவில் கடந்த 16-ஆம் தேதி என்ஐஏ கைது செய்தது. பிறகு ஹரீஷ் என்பவரை ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ கைது செய்தது.இந்த 2 பேரும்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளனா். பின்னா் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிற நபா்கள் மூலமாக கள்ள ரூபாய் நோட்டுகளை பிஎன்பி வங்கியின் கருவூலத்துக்கு ரகசியமாக கொண்டு சென்று வைத்துள்ளனா்.தொடா்ந்து 7 பேரிடமும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் முடிவிலேயே இதில் நடந்த சதி குறித்து முழு விவரமும் தெரிய வரும். அதே போல் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்யும் முயற்சியிலும் என்ஐஏ ஈடுபட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.கருவூலம் என்பது அனைத்து வங்கிகளுக்கும் தனித்தனியாக உண்டு. ரிசா்வ் வங்கியால் அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்களானவை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, கருவூலத்திலேயே வைக்கப்படும். பிறகு அங்கிருந்து அந்த வங்கியின் கிளைகள், ஏடிஎம்-களுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.