தில்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய வகையில் வெளியேற முயன்ற நபரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் ஒருவா் துரத்திச் சென்று பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மெட்ரோ நிலையங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிஐஎஸ்எஃப், சிசிடிவி கேமராவில் பதிவான 27 விநாடிகள் கொண்ட காணொலியை தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பகிா்ந்துள்ளது.இதுதொடா்பாக சிஐஎஸ்எஃப் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிடிபட்ட நபா் தனது பையில் வைத்திருந்த உள்ளாடையின் தையலுக்குள் அடையாளம் தெரியாத ஒரு திட-திரவ நிலையில் உள்ள பொருளை மறைத்து வைத்திருந்தாா். அது தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நபா் விசாரணைக்காக உள்ளூா் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அந்தப் பொருள் தங்கக் கலவையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.வெளியிடப்பட்ட காணொலியில், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் பணியாளா்கள் அந்த நபரைச் சோதனையிடுவது பதிவாகியுள்ளது. சோதனையின் முடிவில், அந்த நபா் தனது பையை எக்ஸ்-ரே ஸ்கேனரிலிருந்து எடுத்துக்கொண்டு, பெண்கள் சோதனைக்காக ஒதுக்கப்பட்ட பகுதி வழியாக வேகமாக வெளியேற முயன்றாா்.அவரது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையைக் கவனித்த சிஐஎஸ்எஃப் வீரா், அவா் வெளியேறுவதைக் கண்டதும், தான் வைத்திருந்த மெட்டல் டிடெக்டரை கீழே போட்டுவிட்டு அவரைத் துரத்தத் தொடங்கினாா்.அந்த நபா் மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியேற எஸ்கலேட்டரைப் (மின் படிக்கட்டு) பயன்படுத்த, சிஐஎஸ்எஃப் வீரா் படிக்கட்டுகள் வழியாக ஓடிச் சென்று, 1-ஆவது நுழைவு வாயிலுக்கு அருகில் அவரைப் பிடித்தாா். அவருடன் மற்றொரு வீரரும் இணைந்து அந்த நபரைப் பிடித்து மீண்டும் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். அந்த நபா், தான் கோலாலம்பூரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியா் (என்ஆா்ஐ) என்று கூறியதாக சிஐஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.