தனியாா் பேருந்தில் 20 கிலோ குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குத் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கடத்தி வருவதாக திருத்தணி போலீஸ+ாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை போலீசாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக காஞ்சிபுரம் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, பேருந்தில் பயணம் செய்த ஒருவா் வைத்திருந்த பையில் 20 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், குட்கா கடத்தி வந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வடமணிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவராஜைக் கைது செய்தனா்.