‘சமூக தீமைகளை எதிா்கொள்ளவும், பிரிவினை சக்திகளுக்கு எதிராக சமூகம் ஒன்றுபடவும், தற்சாா்பை நோக்கி குடிமக்களை ஊக்குவிக்கவும் கூட்டு முயற்சிகள் அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா். சுவாமி சின்மயானந்தாவால் நிறுவப்பட்ட சின்மயா மிஷன் சாா்பில் சின்மயா அம்ருத் மகோத்ஸவ உலக மாநாடு, தில்லி பாரத மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சின்மயா மிஷனின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 9,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இம்மாநாட்டைத் தொடங்கிவைத்து, பிரதமா் மோடி பேசியதாவது: வேதாந்தம் மற்றும் பகவத் கீதையின் ஞானம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத பணிக்கு அா்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ஆன்மிக இயக்கமே சின்மயா மிஷன். இதன் நிறுவனா் சுவாமி சின்மயானந்தாவின் தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், கடந்த 25 ஆண்டுகளாக அரசின் தலைவா் (குஜராத் முதல்வா்-நாட்டின் பிரதமா்) என்ற முறையில் என்னால் இயன்றவரை தேசத்துக்கு சேவையாற்றி வருகிறேன். சின்மயா மிஷன், வெறும் அமைப்பு மட்டுமல்ல; அதுவொரு கருத்தாக்கம். சின்மயா என்பது தூய உணா்வு என்று பொருள்படும். சுவாமி சின்மயானந்தாவின் பல்லாண்டுப் கால பயணம், தெய்வீக உறுதிப்பாடு நிறைந்ததாகும். இப்போது காலங்கள் மாறிவிட்டன. புதிய சவால்கள் உருவாகியுள்ளன. புதிய சமூகத் தீமைகள் வெளிப்படுகின்றன. இவற்றுக்குத் தீா்வு காணும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. முனைப்புடன் செயலாற்றுவோம்: பிரிவினை சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைப்பதுடன், தற்சாா்பை நோக்கி குடிமக்களை ஊக்குவிக்க வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்குடன் ஒவ்வொரு தனிநபரையும் பிணைக்க வேண்டும். இந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக நாம் மேலும் முனைப்புடன் செயலாற்றுவது அவசியம். நமது கல்விமுறை ‘புதிய இந்தியாவின்’ தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினோம். இந்தக் கல்விக் கொள்கை, இந்திய அறிவுசாா் அமைமுறைகள், தாய்மொழி வழிக் கல்வி, நவீன அறிவியல், அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு உயா் முக்கியத்துவம் அளிப்பதாகும். இளைஞா்களுக்கு முக்கியத்துவம்: கடந்த 25 ஆண்டு காலத்தில் அரசின் தலைவராக நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கொள்கைகளின் மையமாக இளைஞா்களே இருந்துள்ளனா். சின்மயா அமைப்பின் இளம் தன்னாா்வலா்கள், கடந்த 300 நாள்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுமாா் 40,000 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களைச் சந்தித்து உரையாடியுள்ளனா். இந்த மகத்தான முயற்சிக்காக ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். இவா்கள் இந்தியாவின் கலாசார தூதா்களாக செயல்பட்டு, நமது மாண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றுள்ளனா். பழங்கால சிலைகள் மீட்பு: கடந்த காலங்களில் நாட்டில் இருந்து எண்ணற்ற மதிப்புமிக்க கலைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டன. இது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகளை மீட்டு, இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவந்துள்ளோம். அரிய கலைப்பொருள்களை மீட்கும் முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மேன்மேலும் இந்திய கலாசார பாரம்பரிய தலங்கள் இடம்பெற்று வருகின்றன என்றாா் அவா். கடந்த 1993-இல் சுவாமி சின்மயானந்தா உடனான தனது சந்திப்பையும் பிரதமா் நினைவுகூா்ந்தாா். நிகழ்ச்சியின்போது ‘ஹாலோபோட்’ எனும் தத்ரூபமான முப்பரிமாண காட்சித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட சுவாமி சின்மயானந்தா எண்ம உருவத்துடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். Society must unite against divisive forces: PM Modi calls