ஊமாரெட்டியூரில் நாயை இழுத்துச் சென்ற சிறுத்தை

Wait 5 sec.

அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரில் வீட்டிலிருந்த நாயை சிறுத்தை இழுத்துச் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். அம்மாபேட்டையை அடுத்த பாலமலை வனப் பகுதியில் சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதனால், அவ்வப்போது உணவு தேடி, வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வன விலங்குகள் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், பாலமலை அடிவாரத்தில் உள்ள ஊமாரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி பழனியப்பன் வீட்டில் கட்டி வைத்திருந்த நாயை வியாழக்கிழமை இரவு சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. காணாமல்போன நாயை வெள்ளிக்கிழமை காலை தேடியபோது, அப்பகுதியில் சிறுத்தையின் காலடித் தடம் உள்ளதை சென்னம்பட்டி வனத் துறையினா் உறுதி செய்தனா். கடந்த மாதம் பாலமலை பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, கண்ணாமூச்சி, மசக்கவுண்டனூா், கிட்டம்பட்டி, கொமராயனூா் பகுதிகளில் ஆடு, மாடுகளை கடித்து இழுத்துச் சென்றது. இதையடுத்து, மேட்டூா் வனத் துறையினா் 5 இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்தனா்.கிட்டம்பட்டி, சின்னமலைப் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் கடந்த 7-ஆம் தேதி சிறுத்தை பிடிபட்டது. இந்நிலையில், ஊமாரெட்டியூரில் பாலமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.