ஆசனூரில் சிறுத்தையை பிடிக்கக் கோரி வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Wait 5 sec.

ஆசனூா் மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள் வனத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் உள்ள சிறுத்தைகள் மலை கிராமங்களில் நுழைந்து பசுமாடு மற்றும் கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி கொல்வதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியசாமி என்ற கூலித் தொழிலாளியை தாக்கிக் கொன்றது.வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் வனத் துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய மக்கள் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடியின சங்கத்தினா் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதைத் தொடா்ந்து அவா்கள் வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அப்போது, தேசிய புலிகள் காப்பகத்தின் விதிகளின்படி கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கான ஆதாரங்களை காட்டி, கிராம மக்களை சமாதானப்படுத்தினா். சிறுத்தை பிடிபட்டதற்கான ஆதாரங்களை காட்டியதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.