விசாரணைக் கைதிகளாகச் (Undertrial Prisoners) சிறையில் இருப்பவர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு; விதிக்கப்படக் கூடிய அதிகபட்ச தண்டனைக் காலத்தின் சரிபாதியைச் சிறையில் கழித்திருந்தால், அவர்களைப் பிணையில் விடுதலை செய்யலாம் என ‘பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா’ (BNSS) பிரிவு 479 கூறுகிறது. ஆனால், பிணை நிபந்தனையை நிறைவேற்றுவதற்கான தகுதி எத்தனை பேருக்கு இருக்கின்றது என்பதுதான் கேள்வி? உறையூர் பாக்கியலெட்சுமியின் வழக்கு நமது ஜனநாயகத்தின் கருப்பு அத்தியாயம்.திருவாரூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் சிவராமன். ஒழுக்கமான குடும்பம். கொஞ்சம் விவசாய நிலம் இருந்தது. சிவராமனுக்கு விவசாயம் தெரியாது. உழுபவர் கொடுத்தால்தான், வேறு வருமானம் இல்லை. சிவராமனின் வாழ்வில் எந்த வசதியும் இல்லை. வறுமை துரத்தத் தொடங்கியது. கால வெள்ளத்தில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டிருந்தது. குத்தகைதாரரை நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. பழுதடைந்த வீட்டைப் புதுப்பிக்க முடியவில்லை. பிழைக்க வழியின்றித் தடுமாறிய சிவராமன், மனைவியையும் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு உறையூருக்கு குடிபெயர்ந்து விட்டார். காவிரிக்கரை அம்மாமண்டபத்தில் உட்கார்ந்து கருமக் காரியங்கள் செய்து தனது குடிப்பெயர்வை நியாயப்படுத்திக்கொண்டார். தனது இரண்டு மகள்களையும் கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். அது, சிவராமனின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. மூத்த மகள் சீதாவிற்கு திருமணம் செய்து வைத்தார். ஹரிராம் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சீதாவின் கணவர் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். இரண்டாவது மகள் பாக்கியலெட்சுமி. மாற்றுத் திறனாளி. ஒரு காலைத் தாங்கித்தான் நடப்பார். உறையூருக்கு குடிபெயர்ந்து கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. வாடகை வீடுதான். சிவராமனுக்கு எந்த பாக்கியமும் ஏற்படவில்லை, ‘லெட்சுமி’யும் சேரவில்லை. திடீரென சிவராமனின் வாழ்வில் சுனாமி வீசத் தொடங்கியது. ‘வாழ்ந்தார் கெட்டால் வரையோட்டுக்குச் சமானமில்லை’ என்ற ஒரு பழமொழி கிராமத்தில் இருக்கிறது. உடைந்து நொறுங்கிய பானையை யாரும் வீட்டிற்குள் வைத்துக்கொள்ள மாட்டார்கள். வேலிக்காலில் அள்ளிக்கொட்டி விடுவார்கள். எச்சரிக்கையோடு வாழவில்லை என்றால்; உடைந்து நொறுங்கிய பானை ஓடுகளைப் போல இந்தச் சமூகம் நம்மைத் துடைத்து எறிந்துவிடும் என்பதுதான் அந்தப் பழமொழியின் பாடம். சிவராமனின் வாழ்வில் அதுதான் நடந்தது. காவல்துறை, வழக்கு, நீதிமன்றம் என்பதையெல்லாம் கனவில்கூட கண்டிராதவர் சிவராமன். குடும்பத்தோடு மோசடி வழக்கில் சிக்க வைக்கப்பட்டார். இப்படியெல்லாம் நடக்குமா என்றால், இப்படியும் நடக்கும் என்பதுதான் நமது சமுதாயத்தின் எதார்த்தமாக இருக்கிறது. 2012, ஒரு காலைவேளை மணி 8.30. அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த நேரம். அலைபேசி அழைப்பு. அழைத்தது சட்டக் கல்லூரி நண்பர். பின்னாளில் ஆசிரியர் ஆகிவிட்டார். “உறையூர் ஸ்டேசன் வரை போயிட்டு வாங்க, ஹரிராம் என்ற பள்ளிக்கூடப் பையனை கூட்டிட்டுப்போய் உட்கார வச்சிருக்காங்க” என்றார். நான் போய்ச் சேருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. சிவராமன், மனைவி, மகள் சீதா மூவரும் காவல் நிலைய வாசலில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் என்ன? ஏது? என்று விசாரித்துக்கொண்டு உள்ளே சென்றேன். காவல் நிலையத்தின் உள் அறையில் ஒரு சிறுவன் உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவன்தான் ஹரிராம். சோமாலியா சிறுவனைப் போல் இருந்தான். இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று இறுகப் பற்றியிருந்தான். கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது. நடுங்குவதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். “தம்பி, ஒன்னோட சார் என்னை அனுப்பியிருக்கிறார். தைரியமா இரு, வீட்டுக்குப் போயிடலாம்” என்றேன். வேகமாகத் தலையாட்டிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். எதற்காக அழைத்து வரப்பட்டான் என்று முழுமையான தகவல் சொல்வதற்கு அங்கு எந்த அதிகாரியும் இல்லை. இருந்த ஒருவரிடமும், “அய்யா வந்து விசாரிப்பார்” என்பதுதான் அதிகபட்ச பதிலாக இருந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு தொலைபேசியில் வந்த இன்ஸ்பெக்டர், “அந்தப் பையனோட சித்தி பாக்கியலெட்சுமியை அழச்சிட்டு வந்து ஒப்படைக்கிறோம்னு எழுதிக்கொடுத்துட்டு அழச்சிட்டுப்போங்க சார்” என்றார். “சார், அவங்க எங்க இருக்காங்கனு எங்களுக்குத் தெரியாது. அவங்க ஹரிராம் குடும்பத்தோட இல்ல, பள்ளிக்கூட சிறுவனை எதுக்கு சார் உட்கார வைக்கிறீங்க” என்ற எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தொலைபேசியைத் துண்டித்தார். சிறுவனை அழைத்துவந்துவிட்டோம். ஹரிராமுக்கு அது தற்காலிக விடுதலையாகத்தான் இருந்தது. மீண்டும் மீண்டும் சிறுவன் ஹரிராமை அழைத்து விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து வந்தனர். ஒட்டுமொத்த குடும்பமும் காவல் நிலைய வாசலில் அடிக்கடி நிற்க வேண்டி இருந்தது. காவல் ஆய்வாளரின் இந்தக் கொடுமையை எதிர்த்து புகார் செய்வதற்கு சிவராமன் குடும்பத்தினருக்கு அச்சம். ஹரிராமுக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்தனர். 20.12.2012 இல் பாக்கியலெட்சுமி என்பவர் மீது நளினி என்ற ஆசிரியை, திருச்சி உறையூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கிறார். திருச்சி புத்தூரில் பாக்கியலெட்சுமி டியூசன் வகுப்பு எடுத்ததாகவும், அந்த வகுப்பிற்கு தனது மகளையும் டியூசன் படிக்க அனுப்பியதாகவும், பாக்கியலெட்சுமிக்கும் தனக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாகவும், தனது கணவர் ராஜ்குமார் என்பவரோடு பாக்கியலெட்சுமியும் சேர்ந்து, திருச்சி என்.எஸ்.பி. சாலையில் காபி கடை வைக்க முடிவு செய்ததாகவும், அதற்காக 2008-ஆம் ஆண்டு, பாக்கியலெட்சுமியிடம் ரூ.25,00,000 பணமும், 30 சவரன் நகைகளையும் கொடுத்ததாகவும் அதற்காக ஓர் ஒப்பந்தம் எழுதிக்கொண்டதாகவும், ஆனால், சொல்லியபடி காபி கடை ஆரம்பிக்கவில்லை என்றும் பணத்தையும் நகையையும் மோசடி செய்துவிட்டதாகவும் பாக்கியலெட்சுமி மீது நளினி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மோசடிக்கும் ஹரிராம் குடும்பத்தினருக்கும் எந்த வகையில் தொடர்பு என்பது குறித்து நளினியின் புகாரில் எந்தத் தகவலும் இல்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அந்தப் புகாருக்குத்தான் சிறுவன் ஹரிராம் பலமுறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டான். நளினியின் புகாரின் அடிப்படையில், 20.03.2013-ஆம் தேதி இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 மற்றும் 420-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் குற்றவாளி பாக்கியலெட்சுமி, 2 ஆவது குற்றவாளி ஹரிராம், 3 ஆவது குற்றவாளி சிவராமன், 4 ஆவது குற்றவாளி சரோஜா, 5 ஆவது குற்றவாளி சீதா என வரிசைப்படுத்தியிருந்தனர். ஆதரவற்றவர்களுக்கான காப்பகத்தில் இருந்த பாக்கியலெட்சுமி 20.04.2013 ஆம் தேதி உறையூர் காவல் ஆய்வாளரால் கைது செய்யப்படுகிறார். உறையூர் கடைவீதியில் வைத்துக் கைது செய்ததாக நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட ஹரிராம் உள்ளிட்ட இதர நபர்கள் கைது செய்யப்படவில்லை. பாக்கியலெட்சுமிக்காக பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. பிணை கிடைத்தது. ஆனால், இரண்டு நபர்கள் பிணை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்ற இயலாத காரணத்தினால், அவர் தொடர்ந்து சிறையில் இருக்க நேரிட்டது. ஆதரவற்றவர் என்ற அவரது தரப்பு வாதத்தை / நியாயத்தை விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆதரவற்ற நிலையில் வாழ்ந்துவரும் பாக்கியலெட்சுமியால் இருநபர் பிணை வழங்க இயலாது என்பதால், சொந்த பிணையில் விடுவிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. நீதிமன்றம் ஏற்கவில்லை. 90 நாள்களில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 30.05.2016 ஆம் தேதி உறையூர் காவல் ஆய்வாளர் குற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை தொடங்கியது. பாக்கியலெட்சுமிக்கு பணம் கொடுத்ததாகச் சொல்லப்படும் புகாரில் தேதி இல்லை. பணமும் நகையும் கொடுத்ததற்கான ஆவணங்கள் இல்லை. புகாருக்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் நான்கு மாத இடைவெளி. பாக்கியலெட்சுமிக்கும் நளினிக்கும் இடையே ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மூன்று ஆண்டுகள் காலதாமதமாகத் தாக்கல் செய்த குற்ற அறிக்கையில் பாக்கியலெட்சுமிக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அந்த அறிக்கை எதிரிகளுக்கு வழங்கப்படவில்லை. நீதிமன்றக் கோப்பில் மட்டும் பதிவாகி இருந்தது. பின்னிட்டு ஒரு மாதம் இடைவெளியில் மீண்டும் ஒரு குற்ற அறிக்கையைக் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அதன் நகல்கள் மட்டுமே எதிரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒரு வழக்கிற்கு இரண்டு குற்ற அறிக்கை என்பதே சட்ட விரோதமானது. பாக்கியலெட்சுமியின் குடும்பத்தினர் வாய்தா தவறாமல் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருந்தனர். நீதிமன்ற வாசலில் உட்கார்ந்திருக்கும் சிவராமன் வயதையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று வணக்கம் வைப்பார். “அவா விதிப்பலன், ராசி... இப்படி சிக்கல்ல மாட்டிக்கிட்டா...” என்று தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக்கொள்வார். அவரது கண்கள் பனித்திருக்கும். சிவராமன் 90 வயதை நெருங்கியிருந்தார். தள்ளாத வயதில் சிவராமனும் சரோஜாவும் குற்றவாளிக்கூண்டில் தடுமாறி ஏறும் காட்சி நீதிதேவதையின் நெஞ்சை உலுக்கியிருக்கும்; நீதிதேவதை அவர்களை அழைத்துக்கொண்டார். ஆம், சரோஜா 25.03.2018ஆம் தேதியும், சிவராமன் 07.04.2018ஆம் தேதியும் இறந்துபோனார்கள். எந்தக் குற்றமும் செய்யாமல், 90 வயதில் அலைக்கழிக்கப்பட்டு மரணத்தைத் தழுவுவதைவிட, மனித வாழ்வில் வேறு பெரிய தண்டனை என்ன இருந்துவிடப்போகிறது? தனது பெற்றோரின் இறப்பிற்கு வந்து செல்வதற்கான பாக்கியமும் பாக்கியலெட்சுமிக்கு இல்லாமல் போனது. காவல்துறை நினைத்தால் எத்தனை வருடங்கள் வேண்டுமானலும் சிறையில் வைக்க முடியும் என்பதற்கான உதாரணமாக அமைந்திருக்கிறது பாக்கியலெட்சுமியின் வழக்கு. பாக்கியலெட்சுமி கைதாகி 5 ஆண்டுகள் கடந்திருந்த நிலையில், 31.05.2018 இல் வழக்கு முடிவடைந்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாக்கியலெட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால்கூட இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்திருக்காது. ‘ஏதோ ஒரு மறைமுகக் காரணங்களுக்காக ஒருவரை விசாரணைக் கைதியாகவே சிறையில் வைத்திருக்க முடியுமா?’ என்றால் முடியும் என்கிறது பாக்கியலெட்சுமி வழக்கு. நமது நீதி அமைப்பில் குரலற்றவர்களுக்கான நியாயங்கள் மௌனித்தே இருக்கின்றன. நமது விசாரணை அமைப்புகளில் உள்ள சில கூறுகள் அநீதிக்கும் துணை நிற்கின்றன. நளினி போன்றவர்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருந்தால், உரிமையியல் நீதிமன்றத்தில்தான் அதற்கான நியாயத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். பாக்கியலெட்சுமியை நீண்டநாள் சிறைவாசி ஆக்கியதன் மூலம், ஹரிராமின் வாழ்வு மீளாத் துயரத்திற்குப் போய்விட்டது. இதற்கு காவல்துறையும் காரணம். தமிழகத்தை அதிரச் செய்த ஒரு நள்ளிரவுக் கைது நடவடிக்கையின்போது, காவல்துறையை நோக்கி “உங்கள் இருதயம் தசையால் செய்யப்பட்டதா? அல்லது மண்ணால் செய்யப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்பினார் நீதிபதி அசோக்குமார். ஹரிராம் விஷயத்திலும் இதே கேள்விதான் எழுகின்றது. குற்றம் சாட்டப்பட்டவரை வழக்கிலிருந்து விடுவிக்கும்போது, அந்தப் புகாரை கொடுப்பதற்கு எவ்விதமான நியாயமான காரணமும் இல்லை என்பதை நீதித்துறை நடுவர் கண்டறிந்தால், ஏன் இழப்பீடு வழங்கக் கூடாது என்பதற்கான காரணத்தைக் கேட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாம் என ‘பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா’ (BNSS) பிரிவு 250 கூறுகிறது. ஆனால், விசாரணை நீதிமன்றங்கள் இதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. பொய்ப் புகாருக்கு எதிராக இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வருமேயானால் அநீதியான புகார்கள் ஒழிந்துவிடும். ‘பாரதிய நியாய சன்ஹிதா’ (BNS) பிரிவு 248-இன்படி, பொய் புகார் கொடுத்தவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்கலாம். உறுதிப்படுத்தப்பட்டால், பொய்ப் புகார் கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். குற்றம்சாட்டப்பட்டவர் சிவில் வழக்கும் தாக்கல் செய்து இழப்பீடு கோரலாம். அதற்கான வலுவும் தைரியமும் வேண்டும். நமது அதிகார அமைப்பை எதிர்த்தோ அல்லது அதிகார அமைப்போடு தொடர்பு உள்ளவர்களை எதிர்த்தோ ஹரிராம் போன்ற சமானியர்கள் எதையும் செய்ய முடியாது. இது ஒரு சமூக அநீதி. நாடு முழுவதும் பாக்கியலெட்சுமியைப்போல ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் விசாரணைக் கைதிகளாகவே இப்போதும் இருந்துவருகின்றார்கள். சிலர் சிறையிலேயே மாண்டுபோகிறார்கள். ஹரிராம் எதிர்கொண்ட காவல் விசாரணைகள் இன்னமும் அவனைத் துரத்திக்கொண்டிருக்கிறது. எல்லாமே அவனுக்கு இப்போது அச்சமாகத்தான் தெரிகின்றது. அவனது வாழ்வு பொய்த்துப் போயிருக்கிறது. பாக்கியலெட்சுமி மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லாமல் தீய நோக்கத்துடன் (Malicious Prosecution) புகார் அளிக்கப்பட்டிருந்தது என்பது வெளிப்படையான உண்மை. சட்டத்தின் பார்வையில் நளினியின் புகார் வெறும் காகிதம். ஆனாலும், அதன் பேரில் ஒரு நீண்ட விசாரணை என்னும் பெயரில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக, அலைக்கழித்ததற்காக ரூ.15 லட்சம் இழப்பீடு கிடைக்கும் வகையில் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனை வலியுறுத்துவதற்கும், மேல்முறையீடு செய்வதற்குமான மனவலிமை ஹரிராமுக்கோ அவரது தாய் சீதாவிற்கோ இல்லை.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2024-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்திய சிறைகளில் 5,11,000 கைதிகள் இருக்கின்றனர். ஆனால், இந்தியச் சிறைகளின் கொள்ளளவு 4,50,000 கைதிகள்தான். தற்போதைய நிலையில், 4 இல் 3 நபர்கள் விசாரணைக் கைதிகளாகவே இருக்கின்றார்கள். தாமதமான விசாரணைகள் மறுக்கப்பட்ட நீதியாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வழக்குகளில் சிக்கி சிறைக்குச் செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் முழுமையாக இருளடைந்துவிடுகின்றது. விரைவான விசாரணைக்காக நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில்தான், ‘விசாரணைக் காலத்தில் சிறைவாசம் என்பது; குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாவதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு காரணியே அன்றி; முன்கூட்டியே தண்டனை வழங்குவதற்காக அல்ல’ என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், இந்தியக் குற்றவியல் நீதிமுறையில், “பிணை வழங்குவதே பொதுவான விதி, சிறைவாசம் என்பது விதிவிலக்கு” (Bail is the rule and jail is the exception) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பிணையில் வெளியில் செல்ல முடியாத விசாரணைக் கைதிகள் எவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டும் என்ற சட்ட வரையறை எதுவும் நம்மிடம் இல்லை. குற்றச்சாட்டுக்காக சட்டம் வரையறை செய்திருக்கும் காலத்தைவிட கூடுதலாகச் சிறையில் இருக்க நேரிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றங்கள் ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும். பொய்ப் புகாரால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டை உறுதி செய்ய வேண்டும். நீண்ட காலம் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளைக் கண்காணித்து அவர்களுக்காகப் பேசும் சட்டப்பூர்வ அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். விசாரணை என்ற பெயரில் ஒரு மனிதனை நீண்ட காலம் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் தன்மையானது. ஒரு நாடு குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி நடத்துகின்றது என்பதில்தான் அந்த நாட்டின் நாகரிகம் அடங்கியுள்ளது. நீதிக்கான குரல் ஒலிக்கும்...நியாயத்திற்கான பயணம் தொடரும்...கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்Tamilmani Arumugam, Advocate.advocatetamilmani@gmail.comRegarding false accusations and the prolonged imprisonment of undertrials as a result...