சென்னையில் ஆவின் பால் கிடைக்கிறதா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

Wait 5 sec.

சென்னையின் ஆவின் பால் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.ஏற்கனவே, தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில மாதங்களாகவே ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அதே வேளையில், மற்றொரு பக்கம் தனியார் நிறுவன பால் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. இந்த நிலையில், மழை பெய்து வருவதால், மேலும் ஆவின் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று சென்னை மக்கள் அச்சத்தில் இருந்தனர். நள்ளிரவில் கனமழை பெய்வதால் பால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஆங்காங்கே நிறுத்தப்படுவதாகவும், சில பகுதிகளில் காலையில் ஆவின் பால் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் தகவலில், சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.சென்னையில் மழை பெய்தாலும் ஆவின் பால் விநியோகம் சீராக நடைபெறும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.அதுபோல, பால் விநியோகம் செய்ய, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 201க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் இயக்கப்பட்டு பால் விநியோகம் சீராக நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல், மற்ற பால் பொருள்களும் 31 ஒப்பந்த வாகனங்கள் முலம் சென்னை முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலம் என்பதால், தேவைக்கு ஏற்ப மற்ற மாவட்டங்களில் இருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.