காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள். நான் பேசுவது உங்களுக்குக் கேட்காது என்று எனக்குத் தெரியும், ஏன் வெளிநாடு சென்றிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனால் பரவாயில்லை, அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்றும் அமித் ஷா ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் பேசியிருக்கிறார்.புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டுகளின் போர்வையில், சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் வாக்குகளை நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதை இந்த நாடு உணர்ந்துகொண்டுள்ளது என்று கூறினார்.மேலும் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு கிடைக்காது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. வாக்குச்சாவடி பணியாளர்கள் முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை, பாஜகவினர் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அயராது உழைக்கிறார்கள் என்றும் கூறினார்.மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பல மாநிலங்களில் காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியை இழந்துவிட்டிருந்தது.நீதிமன்றங்கள் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் அவர்கள் நியாயமாக நடப்பதாகக் கூறுவார் ராகுல். ஒருவேளை, உங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தால், நீதிமன்றத்தையே கேள்வி எழுப்புவீர்கள். இந்த இரட்டை நிலைப்பாடு எப்போதும் பயன்தராது ராகுல். தில்லியில் நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களால் மக்களின் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் அமித் ஷா கூறினார்.