உலகத் தலைவர்களின் எச்சரிக்கைக் குறியீடு!

Wait 5 sec.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் அரசு செயல்திறன் துறை என்ற துறையை உருவாக்கினார். அதன் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், 'ஸ்பேஸ்எக்ஸ்' மற்றும் 'எக்ஸ்' நிறுவனங்களை நடத்தி வருபவருமான எலான் மஸ்க்கை நியமித்தார் டிரம்ப்.அமெரிக்க அரசின் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது, அளவுக்கு அதிகமாகவுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் தேவையற்ற விதிமுறைகளை நீக்குவது ஆகியவை இந்தக் குழுவின் முக்கிய நோக்கங்களாகும். இதற்கான வருடாந்திர கால வரம்பு 130 நாள்கள் மட்டுமே என்பதால், ஓராண்டுக்கு முன்பு அந்தப் பதவிலிருந்து விலகினார் மஸ்க்.எனினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி, செலவின மசோதாக்களை மஸ்க் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். 'நான் இல்லையென்றால், தேர்தலில் டிரம்ப் தோற்றுப் போயிருப்பார்' என்றும் மஸ்க், டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் 'எலான் மஸ்க் பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார்' என்று சாடினார். மஸ்க்குக்கு சொந்தமான 'ஸ்பேஸ்எக்ஸ்' மற்றும் 'டெஸ்லா' நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை ரத்து செய்யப் போவதாகவும் எச்சரித்தார். பின்னர், 21.09.2025 அன்று, சார்லி கிர்க்கின் நினைவு நிகழ்வில் டிரம்ப்பை நேரில் சந்தித்து இணக்கமானார் மஸ்க்.இதனிடையில், 29.09.2026 அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்பத் தலைவர்களுடனான சந்திப்பின்போது, அதிபர் டிரம்ப், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை 'மிகப்பெரிய சக்தி' (மான்ஸ்டர்) என செல்லமாக அழைத்தது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள், 'அமெரிக்காவை மகத்தான நாடாக மாற்றுவதற்கு வெளிநாட்டினர் தேவையில்லை' என்பதாகும். கடந்த 08.10.2026 அன்று வெள்ளை மாளிகையில் 'அறிவியல் ஒரு புதிய பொற்காலம்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் தொழில்நுட்பப் பெருமையை பறைசாற்றும் வகையில், நாட்டின் உயரிய 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளை' ஆறு தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு வழங்கினார். இதில் நகைமுரண், சுவாரஸ்யம் என்னவென்றால் இவ்விருதைப் பெற்றவர்களில் டெக்சாஸில் பிறந்த, டெல் டெக்னாலஜிஸின் நிறுவனரான மைக்கேல் டெல் ஒருவர் மட்டுமே அமெரிக்கர்.தென்னாப்பிரிக்காவில் பிறந்து, பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, இறுதியில் அமெரிக்காவின் குடிமகனான மஸ்க்கும் தேசிய அறிவியல் பதக்கத்தை டிரம்ப்பிடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்போது, மஸ்க்கை 'நவீனகால தாமஸ் எடிசன்', 'தேசிய புதையல்', 'தொழில்துறை மாவீரர்' என புகழ்ந்து பேசினார் டிரம்ப்.இந்தச் சூழ்நிலையில் எலான் மஸ்க், தனது மாஸ்க்கை (முகமூடியை) கழற்றி, தனது பார்வையை இந்தியாவின் மீதும், ஐரோப்பிய நாடுகள் மீதும் திருப்பியுள்ளார். அவர் இந்தியாவின் இணைய சந்தையை முற்றிலுமாகக் கைப்பற்ற முனைந்து வருகிறார்.இவருக்குச் சொந்தமான 'ஸ்டார்லிங்க்' நிறுவனம் கைப்பேசி சமிக்ஞை இல்லாத இடங்களுக்கும் செயற்கைக்கோள் வழியாக இணையதள சேவைகளை அளிக்கிறது. 'ஸ்டார்லிங்' நிறுவனம் நேரடியாக செயற்கைக்கோள் வழியாக இணையத் தொடர்பை வழங்குகிறது. பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தியா மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அந்நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில், இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' திட்டத்தை பெரும் செல்வந்தர்கள் தடுப்பதாக மஸ்க் மறைமுகமாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.கடந்த 7.10.2026 அன்று மஸ்க்கின் 'எக்ஸ்' பக்கத்தில், டாஜ் டிசைனர் என்ற பயனர், இந்தியாவில், 11,256 கிராமங்களில் 4ஜி இணையதள சேவை கிடைப்பதில்லை எனப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த மஸ்க், 'இந்திய மக்களைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சில பெரும் தொழிலதிபர்கள் எங்களைத் தடுக்கின்றனர். அவர்கள் யார் என்பதை உங்களால் ஊகிக்க முடியும். இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்' என்றார்.8.10.2026 அன்று வெளியிட்ட மற்றொரு பதிவில் 'ஸ்டார்லிங்க் நிறுவனம் 165 நாடுகளில் இணைய சேவை வழங்க உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்துச் சட்டங்களையும், தேவைகளையும் நிறைவு செய்தும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்தியாவின் முதலாளி அம்பானியா? என நேரடியாக முகேஷ் அம்பானியின் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.'செயற்கைக்கோள் வாயிலான இணைய சேவைகள் உட்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் பாரபட்சமற்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் 'ஜியோ சாட்காம்' மற்றும் 'யூடெல்சாட் ஒன்வெப்' ஆகிய மூன்று நிறுவனங்களும் தற்போது பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக்கையில் உள்ளன. பாதுகாப்பு மதிப்பீடு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அடுத்த கட்டமாக அலைக்கற்றை ஒதுக்கீடு கோரலாம். மூன்று நிறுவனங்களும் தற்போது ஏறக்குறைய ஒரே கட்டத்தில் உள்ளன. எனவே, விதிமுறைகள் அல்லது அவை செயல்படுத்தப்படும் விதம் பாரபட்சமானவை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சகம் பதிலளித்ததுள்ளது.இதில் திருப்தியடையாத மஸ்க், 9.10.2026 அன்று 'எக்ஸ்' தளத்தில், அம்பானி குறித்து அவர் வெளியிட்ட பதிவு- 'இந்தியாவின் உண்மையான தலைவர் நீங்கள்தான் என்பதை உணராமல் இருந்ததற்கு என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்திய மக்கள் மீது, உங்களது ஏகபோக சுரண்டலை மேற்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள். இருப்பினும், ஸ்டார்லிங்க் போட்டியிட அனுமதிப்பது குறித்து நீங்கள் பரிசீலிப்பீர்களா?' என்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.நேரடியாக செயற்கைக்கோள் மூலம் இயங்குவதால் 'ஸ்டார்லிங்க் நெட்வொர்க்' இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வராது. இந்தியர்கள் பற்றிய அனைத்துத் தரவுகளும், அமெரிக்காவின் கைக்கு எளிதாகச் சென்று விடும். இதனால், இந்தியாவின் இறையாண்மை கேலிக்கூத்தாகி விடும். மக்களின் தன்மறைப்பு (ப்ரைவசி) முற்றிலும் பறிபோகும். இது தெரிந்துதான் இந்தியா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் மூலம் அகண்டஅலைவரிசை இணைய சேவை இந்தியாவில் நுழைவது வெறும் வணிகப் போட்டி சார்ந்தது மட்டுமல்ல; அது நாட்டின் இறையாண்மை, தகவல் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த பல ஆழமான சவால்களை உள்ளடக்கியது என்பதை இந்தியா நன்கு அறிந்துள்ளது.இந்தியாவில் கிடைக்கும் இணைய வசதி, ஸ்டார்லிங்க்கிடம் போனால் இருபது மடங்கு கட்டணம் உயரும். கிராமப்புற மக்களுக்கு குறைந்த விலையில் இணைய வசதி கிடைப்பது பாதிக்கப்படும். கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிப்பதற்கு இவையும் காரணம்.நாட்டில் செயற்கைக்கோள் வாயிலாக இணைய சேவைகளை வழங்குவதற்கு எலான் மஸ்க்கின், 'ஸ்டார்லிங்க்', ஜியோ நிறுவனத்தின் 'சாட்காம்' மற்றும் பிரான்ஸ் நாட்டின் 'யூடெல்சாட் ஒன்வெப்' ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள், சேவையைத் தொடங்குவதற்கு முன்பாக நாட்டின் பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவு செய்ய வேண்டும். அதன்பிறகு, அலைக்கற்றை ஒதுக்கீடு பெற வேண்டும்.இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கணக்குப்படி, 2026 மார்ச் வரை இந்தியாவில் உள்ள கம்பியில்லா இணைய இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 104 கோடி. கம்பிவடம் கூடிய இணைய இணைப்பு வைத்துள்ளவர்கள் 4.66 கோடி. அமெரிக்காவில் இணைய இணைப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 33 கோடி மட்டுமே. இந்த அபரிதமான சந்தையைக் கைப்பற்ற மஸ்க் இந்தியாவுக்குள் நுழைய சகலவிதமான சாகசங்களையும் செய்யத் துணிந்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.காரணம், அமெரிக்காவில் வரும் 03.11.2026 அன்று இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதில், டிரம்ப் கட்சியை எப்படியாவது கரைசேர்க்க வேண்டுமென்பதற்காக துடியாய் துடிக்கிறார் மஸ்க். கடந்த ஜூலை மாதத்திலிருந்து மட்டும் 276 மில்லியன் டாலருக்கும் (ரூ.2,641.5 கோடி) அதிகமாக வாரியிறைத்திருப்பதாக வாஷிங்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு துணை போன எலான் மஸ்க், தற்போது இடைத் தேர்தலிலும் தனது பண பலத்தைக் கொண்டு குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிப்பது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் என்கின்றனர் ஜனநாயக கட்சியினர்.இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களை செய்துவந்த மஸ்க், இப்போது ஐரோப்பிய தலைவர்களைக் குறிவைத்து இணைய வழியில் அச்சுறுத்தி வருவதாக பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது. 'மஸ்க், ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பிரிட்டன் விவகாரங்களில் தீவிர கருத்துகளைப் பரப்புவது மஸ்க்கின் வழக்கமாகி விட்டது' என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோயல் பரோட்டின் குற்றச்சாட்டு உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு இல்லாமல், மஸ்க் இவ்வாறு செயல்பட முடியாது என நம்புகின்றனர் உலகத் தலைவர்கள். இப்போது, மஸ்க் உலகத் தலைவர்களால் ஓர் 'எச்சரிக்கை' குறியீடாகவே அறியப்படுகிறார்.