செஞ்சியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போன நிலையில், 10 நாள்களாக காவல் துறையினர் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல்போன வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஏதேனும் துப்பு கிடைக்குமா என்ற அடிப்படையில், காணாமல் போன சிறுமி குறித்து அவரது தாயிடம் சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி, அக். 12-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காணாமல்போனாா்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பல்வேறு இடங்களிலும் தேடினா். சிறுமியைத் தேடும் பணியில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.தனிப்படையினா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 600 கைப்பேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தினா். எனினும், வழக்கில் துப்பு துலங்கவில்லை. 10 நாள்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.அதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகளிடம், விழுப்புரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குக்குரிய ஆவணங்களை ஒப்படைத்தனர். இதையடுத்து சிபிசிஐடி, சிறுமி காணாமல்போனது குறித்து புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, இன்று காலை தாயிடம் விசாரணை நடத்தி வருகிறது.