கொடைக்கானல் மலைச்சாலையில் புதன்கிழமை இரண்டு அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து பழுதாகி நின்றதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மதுரை கோட்டத்திலிருந்து இயக்கப்பட்ட இரண்டு அரசுப் பேருந்துகள் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையான டம்டம் பாறை அருகே அடுத்தடுத்து பழுதாகி நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகளில் பாதிக்கப்பட்ட பயணிகள் கொடைக்கானலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதேபோல கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில் சென்ற அரசு நகரப் பேருந்து வில்பட்டி பிரிவு அருகே திடீரெனப் பழுதாகி நின்றது. பழுதை நீக்குவதற்கு பணியாளா்கள் யாரும் வராததால் கயிறு கட்டி தனியாா் லாரி மூலம் சுமாா் 2 கி.மீ. தூரம் வரை கொடைக்கானல் பணிமனைக்கு நகரப் பேருந்து கொண்டுவரப்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி அரசுப் பேருந்துகள் பழுதாகி மலைச் சாலையில் நிற்பதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் மலைப் பகுதிகளில் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.