தேவை வேலைவாய்ப்புத் திட்டங்கள்!

Wait 5 sec.

பொ. ஜெயச்சந்திரன்உலகிலேயே அதிக இளைஞர்கள் வாழும் நாடுகளில், இந்தியாவும் ஒன்றாகும். நம் நாட்டின் மிகப் பெரிய பலம் இளைஞர் சக்திதான். ஆனால், அந்த இளைஞர் சக்தி வேலைவாய்பின்மையால், கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி முடித்த இளைஞர்கள் வரை தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். பல ஆண்டுகள் போட்டித் தேர்வுகளுக்காக தயாராகியும், அரசு-தனியார் வேலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நிலையை மாற்ற பலதரப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.குறிப்பாக, ஓர் இளைஞரின் வாழ்க்கையில் வேலை என்பது வெறும் வருமானத்துக்கான வழி மட்டுமல்ல. அது அவருடைய தன்னம்பிக்கை, சமூக அங்கீகாரம், குடும்பப் பொறுப்பு, எதிர்கால நம்பிக்கை போன்ற அனைத்தும் அடங்கும். எனவே, வேலை கிடைக்காத நிலை நீடித்தால் மன அழுத்தம், ஏமாற்ற உணர்வுகள் தானாகவே உருவாகலாம். வேலைவாய்ப்பு இல்லாத ஓர் இளைஞர் எந்த வருமானமும் இல்லாத காரணத்தாலும், தனது வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய கட்டாய சூழலாலும் குறு-சிறு தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்தாலும், வங்கிக் கடன் பெறுவதற்குக்கூட போதுமான சான்றிதழ்கள் இல்லை என்பதாலும், முதலீடும் கிடைக்கவில்லை என்பதாலும் அந்த எண்ணமும் நிறைவேறாமல் இடையில் நின்று விடுகிறது.இன்றைய சமூகத்தில் திருமணத்துக்குப் பொருளாதார நிலைத்தன்மை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நிரந்தர வேலை அல்லது நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் பல இளைஞர்களின் திருமணமும் தாமதமாகிறது. சில குடும்பங்கள் அரசு வேலை அல்லது அதிக வருமானம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதால், தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். பெரிய தொழிற்சாலைகளைவிட, ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகப்படியான தொழில் வளாகங்கள் அமைத்து, குறைந்த வாடகையில் இடம், மின்சாரம், தண்ணீர், இணைய வசதி ஆகியவற்றை அதிக அளவில் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதன்மூலம் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் தங்களுடைய மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு பெற முடியும்.கிராமப்புற தொழில்மயமாக்கல் அதிகரிக்க முன்னுரிமை வழங்க வேண்டும். வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்குகள், பால், மீன், காய்கறி, பழங்கள் சார்ந்த தொழில்கள், கைத்தொழில் மையங்கள் ஆகியவற்றை கிராமங்களில் அமைத்தால் அங்கேயே வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது ஒரு தனித் துறை அமைச்சகத்தின் பொறுப்பு மட்டுமல்ல, கல்வி, தொழில், நிதி, தொழிலாளர் நலம், தகவல் தொழில்நுடபம் உள்கட்டமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தீர்வை எட்ட முடியும்.அதே நேரத்தில், வேலைவாய்ப்பின் தரமும் முக்கியமானது. நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள் வேலைவாய்ப்புக்கு தனித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் தொடங்கும் பெண்களுக்கு நிதி, இலவசப் பயிற்சி, சந்தை வாய்ப்புகள், இணையவழி விற்பனை வசதிகள் விரிவுபடுத்த வேண்டும். அவர்களின் பொருளாதார பங்கேற்பு அதிகரித்தால் குடும்ப வருமானமும், நாட்டின் உற்பத்தித் திறனும் உயரும்.இதெல்லாம் ஒருபுறமிருக்க மத்திய, மாநில அரசு ஊழியர் தனது வாழ்நாளில் சுமார் 30 முதல் 35ஆண்டுகள் அரசுப் பணியாற்றுகிறார்கள். சில வீடுகளில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாககூட இருக்கிறார்கள். அவர்கள் பணிக் காலத்தில் மாதந்தோறும் நிலையான ஊதியம், பல்வேறு சலுகைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்புகளைப் பெறுகின்றனர்.ஒய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்களில் பலரும் தாங்கள் பெற்ற ஓய்வூதியம், ஒய்வூதியப் பலன்களையும் முதலீடாகக் கொண்டு நிதி சார்ந்த மற்றும் சிறு தொழில்களை தொடங்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் நிதி வலிமையால் புதிய வணிகங்களைத் தொடங்கும் போது, அதே துறையில் முயற்சிக்கும் இளைஞர்களுக்கு போட்டி மேலும் அதிகரிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக சில கொள்கை மாற்றங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் புதிய வணிக நிறுவனங்களைத் தொடங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.அனைவருக்கும் அரசு-தனியார் வேலைகள் கிடைப்பது சாத்தியமில்லை. எனவே, வேலை தேடுபவர்களை வேலை வாங்குபவர்களாக மாற்ற வேண்டும். வட்டியில்லா கடன், தொழில் தொடங்க மானியம், தொழில்நுட்ப ஆலோசனை, சந்தைப்படுத்துதல், நிர்வாகப் பயிற்சி போன்ற வசதிகளை ஒருங்கிணைத்து அதிகமாக வழங்கினால் ஆயிரக்கணக்கான புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும்.