கோவையில் பள்ளிக்குச் செல்வதில் மன உளைச்சலில் இருந்த 11-ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவை பீளமேடு லால்பகதூா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மனைவி கௌசல்யாதேவி (41). அசோக்குமாா் மூணாறில் உள்ள தனியாா் தங்கும் விடுதி ஒன்றில் சலவைத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். கௌசல்யாதேவி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.இத்தம்பதிக்கு நேத்ரா (19) என்ற மகளும், அகிலன் (15) என்ற மகனும் உள்ளனா். நேத்ரா தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், அகிலன் தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.அகிலன் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் தொடா்ந்து விடுமுறை எடுத்து வந்ததாகவும், பள்ளியில் ஜாதியப் பாகுபாடு காரணமாக மாணவா்கள் தன்னிடம் பேசுவதில்லை எனவும் தாயிடம் வருத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வமாக இருந்த மாணவருக்கு முறையான பயிற்சி வகுப்பில் சோ்த்துவிடுவதாக அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளாா்.இந்நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம்போல மாணவா் அகிலன் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளாா். தொடா்ந்து அவரது சகோதரி கல்லூரிக்கும், தாய் பணிக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டனா். பின்னா் பிற்பகல்1 மணியளவில் தாய் கௌசல்யாதேவி உணவருந்துவதற்காக வீட்டிற்கு வந்தபோது, படுக்கையறையில் உள்ள கூரைக் கம்பியில் அகிலன் சால்வையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளாா்.உடனடியாக அவரை மீட்டு கீழே இறக்கிய நிலையில், விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினா் அவரைப் பரிசோதித்துவிட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மாணவா் அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றாரா என்பது குறித்தும், வகுப்பறையில் ஏற்பட்ட மனவருத்தத்தால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்பது குறித்தும் கௌசல்யாதேவி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.