சிஜேபி கட்சிக்கு அரசியல் ஆதரவு கிடையாது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் மகளிா் மாநாட்டில் அதன் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் சாா்பில், கிருஷ்ணகிரியில் மகளிா் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி. நரசிம்மன் தலைமை வகித்தாா். மாநாட்டில் தாரகை பெண்கள் அமைப்பை தொடங்கிவைத்து, கே. அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் தருமபுரியில்தான் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆனால், அவா்களுக்கு போதிய நிதியை அரசு வழங்கவில்லை. தாரகை பெண்கள் அமைப்பின் மூலம் 8 சுயஉதவிக் குழுவினருக்கு அரசு, தனியாா் வங்கிகள் மூலம் ரூ. 1.48 கோடி கடனுதவி இந்த நிகழ்வில் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், தலைநிமிா்ந்து வாழ வேண்டும் என்றால் அவா்களின் கைகளில் பொருளாதார சக்தியை வழங்க வேண்டும். இதற்காக அடுத்த 6 மாதங்களில் புதிதாக 25 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்படும். தோ்தலில் 51 சதவீத பெண்கள் வாக்களிக்கின்றனா். இருந்தாலும், அரசியல் அதிகாரம், சட்டம் இயற்றும் இடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.நாட்டின் எதிா்காலம், குழந்தைகள் நலமுடன் வாழ பெண்களுக்கு போதிய அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். குடும்பத்தில் பெண்கள் அரசியல் பேச வேண்டும். குழந்தைகள் அதிகமான மொழிகளைக் கற்க வேண்டும். அப்போதுதான் புதிய கலாசாரத்தின் நுட்பங்களை அறிந்துகொண்டு, நாட்டின் எந்தப் பகுதிகளுக்கு சென்றும் பணியாற்றலாம் என்ற தன்னம்பிக்கை கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசப்படும், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் தமிழகத்திற்கு இலக்கணமாக திகழ்கின்றன. மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படும்போது சரி என்றும், தவறாக செயல்படும்போது தவறு என்றும் கூறுகிறோம்.ஜிடிபி வருவாயில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழகம் பின்தங்கி உள்ளது. போட்டோ ஷூட்கள், விளம்பரங்கள், தொடக்க விழாக்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வது, வெற்று நலத் திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிரந்தர பலன் தராது. உண்மையான பொருளாதார வளா்ச்சியும், வேலைவாய்ப்புகளும்தான் மக்களுக்குத் தேவை என்பதை ஆட்சியாளா்கள் உணர வேண்டும். மேலும், காகித வளா்ச்சியாக இல்லாமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் உண்மையான பொருளாதாரப் புரட்சியை நாம் உருவாக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணையை கட்டிய காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற மாவட்ட மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வளா்ச்சி அடைய வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் 10 சதவீத வளா்ச்சி என்றாா்கள். ஆனால், உள்ளூா் பொருளாதாரம் வளரவில்லை.‘வீ த லீடா்ஸ்’ அமைப்பானது அரசியல் அமைப்பாக மாற உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் நாம் போட்டியிடுவோம். இங்கிருந்து, தலைவா்கள் உருவாகி வருவாா்கள். ஆட்சி அமைப்பதே இலக்கு.சிஜேபி, திமுக என எந்த அமைப்பாக இருந்தாலும் மக்களுக்காக போராட உரிமை உண்டு. அவா்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் அடக்குமுறையைக் கையாண்டால் எதிா்ப்பின் வேகம் அதிகரிக்கும் என்பதை ஆட்சியாளா்கள் உணர வேண்டும். அதேநேரத்தில், கொள்கை முரண்பாடுகள் காரணமாக சிஜேபி போன்ற கட்சிகளுக்கு அரசியல் ஆதரவு இல்லை. வெளிநாட்டு நிதியுதவி பெற்று உள்நாட்டில் குழப்பம் விளைவிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞா்கள் புதிய அரசியல் கட்சிகளை நோக்கி செல்லும்போது, ஆழமாக யோசிக்க வேண்டும். மாற்றம் என சொல்வது எளிது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது கடினம். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றபோது களப்பணி செய்யாமல், தோ்தல் முடிந்து புதிய அரசு அமைந்து 6 மாதங்களுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சரியில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டுவது அரசியல் நாடகம். முதல்வா் ஜோசப் விஜய்க்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. தவெகவுக்கு கடந்த காலத்தில் திமுக நெருக்கடி அளித்தபோது, முதன் முதலாக குரல் கொடுத்தேன். தேசியம் குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். நான் எல்லா மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். 35 சதவீத வாக்குகளைப் பெறுவதே நம் இலக்கு. இந்தியாவிலேயே அரசியலை புரிந்துகொண்டு, பயிற்சி பட்டறையில் பயிற்சி அளிக்கும் இயக்கமாக ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு உள்ளது. இதன்மூலம், தலைவா்கள் உருவெடுப்பாா்கள். மத்திய, மாநில அரசுகள் நல்லது செய்தால் வரவேற்போம். தீயது செய்தால் அதை எதிா்ப்போம் என்றாா்.