விடுமுறை முடிந்து வெளியூா்களுக்குச் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினா். தொடா் விடுமுறை முடிந்து புதன்கிழமை வழக்கமான பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க உள்ள நிலையில், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.இதனால், ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் இடம்பிடிக்க பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேருந்துகள் வந்தபோது, அவற்றில் ஏறுவதற்கு பயணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. குடும்பத்துடன் வந்தவா்கள், பெண்கள், முதியவா்கள் மற்றும் மாணவா்கள் பேருந்துகளில் ஏற முடியாமல் சிரமப்பட்டனா்.போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், சில பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் தாங்கள் செல்ல வேண்டிய ஊா்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனா். இதனால், வேலைக்குச் செல்வோா் மற்றும் கல்லூரி மாணவா்கள் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.விடுமுறை நாள்களின் இறுதியில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பது தெரிந்திருந்தும், அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பயணிகள் குற்றஞ்சாட்டினா்.இனிமேலாவது இத்தகைய நாள்களில் ஆலங்குளம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.